உலகம்
By Polls: உ.பி., பீகார் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள் அமோக வெற்றி! – பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு பலத்த அடி

By Polls: உ.பி., பீகார் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள் அமோக வெற்றி! – பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு பலத்த அடி
உத்தரப்பிரதேசம், பீகார் மாநில இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.
பீகாரில் 4 தொகுதிகளுக்கான தேர்தலில் இமாம்கஞ்ச் தொகுதியை ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தக்கவைத்துள்ளது. மார்க்சிஸ்ட் வசமிருந்த தராரி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த ராம்கர் தொகுதிகளை பாஜக-வும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த பெலாகஞ்ச் தொகுதியை ஐக்கிய ஜனதா தளமும் வென்றன. இதன்படி, 4 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.
அதேநேரம், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த மாதத்தில் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி, 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. ஆனால், இதில், மூன்று தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இது பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:
Maharashtra, Jharkhand Election Results: 2019 vs 2024 – மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆளுங்கட்சிகளுக்கு உயர்வா?… சரிவா?
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், சமாஜ்வாதி கட்சி, கர்ஹால், சிசாமாவ் தொகுதிகளை தக்கவைத்தது. ஆனால், சமாஜ்வாதி வசமிருந்த கத்தேஹரி, குண்டர்கி தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
காசியாபாத், கைர், புல்புர், மஜாவன் தொகுதிகளை பாஜக தக்கவைத்தது. மேலும், மீராப்பூர் தொகுதியை பாஜக கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி தக்கவைத்தது. இதன்படி, 2 தொகுதிகளில் சமாஜ்வாதியும், 7 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிவாகை சூடியுள்ளன.