விளையாட்டு
IPL Auciton 2025 : மீண்டும் சிஎஸ்கே அணியில் அஸ்வின்… முக்கிய வீரர்களை தட்டிதூக்கிய சென்னை

IPL Auciton 2025 : மீண்டும் சிஎஸ்கே அணியில் அஸ்வின்… முக்கிய வீரர்களை தட்டிதூக்கிய சென்னை
டெவோன் கான்வே – அஷ்வின்
கடும் போட்டிக்கு மத்தியில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. மற்ற சில முக்கிய ஆட்டக்காரர்களையும் சென்னை அணி கைப்பற்றியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஐபிஎல் அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக இந்த ஏலத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
அடுத்தபடியாக நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து விடுவிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் சென்னை அணி அதிக ஆர்வம் காட்டவில்லை.
2022 ஏலத்தின்போது ராஜஸ்தான் அணிக்கு சென்ற ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரை வாங்குவதில் கடும் போட்டி காணப்பட்ட நிலையில் ரூ. 9.75 கோடிக்கு சென்னை அணி விலைக்கு வாங்கியது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை அணியில் மீண்டும் இணைகிறார் அஷ்வின்.
இதேபோன்று சூப்பர் ஃபார்மில் இருக்கும் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவிந்திராவை ரூ. 4 கோடி கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே சென்னை அணியில் இருந்த முக்கிய ஆட்டக்காரரான டெவோன் கான்வே ரூ. 6.25 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.