விளையாட்டு
IPL Auction 2025 : கேப்டன்களுக்கு ரூ. 25+ கோடி செலவிட்ட 2 அணிகள்… ரூ. 14 கோடிக்கு KL ராகுலை வாங்கிய டெல்லி…

IPL Auction 2025 : கேப்டன்களுக்கு ரூ. 25+ கோடி செலவிட்ட 2 அணிகள்… ரூ. 14 கோடிக்கு KL ராகுலை வாங்கிய டெல்லி…
ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல்
கேப்டன்களுக்காக பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக செலவிட்ட நிலையில் டெல்லி அணி ரூ. 14 கோடி கொடுத்து கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் 2025 ஆம் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் சில அணிகள் கேப்டன்களை விலைக்கு வாங்குவதில் ஆர்வம் காட்டின.
நடப்பு சாம்பியனாக இருக்கும் கொல்கத்தா ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியால் விடுவிக்கப்பட்டிருந்தார். அவரை வாங்குவதற்கு டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் அதிக ஆர்வம் காட்டின. இறுதியாக அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26.75 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது.
ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுப்பதற்கான ஆர்.டி.எம். வாய்ப்பை கொல்கத்தா அணி பயன்படுத்தவில்லை. இதேபோன்று டெல்லி கேபிடல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த்தை அணியில் எடுப்பதற்கும் போட்டி காணப்பட்டது.
பந்த்தை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ. 27 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது. அவரை அணியில் தக்க வைப்பதற்கான ஆர்டிஎம் முறையில் டெல்லி அணி ஆர்வம் காட்டவில்லை. ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளின் கேப்டன்களாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் லக்னோ அணியால் விடுவிக்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுலை டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் சாமர்த்தியமாக வாங்கியது. இன்றைய ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட சிறந்த வீரர்களில் ஒருவர் கே.எல்.ராகுல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டெல்லி அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை விடுவித்த லக்னோ அணி, அவர் வாங்கப்பட்ட தொகையை விட புதிய கேப்டன் ரிஷப் பந்திற்கு சுமார் 2 மடங்கு (ரூ. 27 கோடி) செலவிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.