விளையாட்டு
IPL Auction 2025: தமிழர்களின் நீண்ட நாள் ஏக்கம்… பதிலாக அமைந்த சி.எஸ்.கேவின் இரண்டு தேர்வு!

IPL Auction 2025: தமிழர்களின் நீண்ட நாள் ஏக்கம்… பதிலாக அமைந்த சி.எஸ்.கேவின் இரண்டு தேர்வு!
ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மஞ்சள் சட்டையை அணிகிறார்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்றது. தோனி, ருதுராஜ், ஜடேஜா, பதிரனா, துபே என ஐந்து வீரர்களை ஏற்கனவே தக்கவைத்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏலத்தில் ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்தது. பின்னர் இரண்டாவது பேட்ச்சில் தீவிரம் காட்டியது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே 6.25 கோடி ரூபாய்க்கு மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட கான்வே 23, 24 ஆகிய ஆண்டுகளிலும் அதே தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இம்முறை 6.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மற்றொரு நியூசிலாந்து வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையுமான ரச்சின் ரவீந்திரா ஆர்.டி.எம் கார்டு மூலம் 4 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு 4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினை தட்டித்தூக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ராஜஸ்தான் அணிக்கும் சென்னைக்கும் இடையே யார் அஸ்வினை ஏலத்தில் எடுப்பது என கடுமையான போட்டி நிலவிய நிலையில் 9.75 கோடி ரூபாய்க்கு சி.எஸ்.கே அணி ஒப்பந்தம் செய்து அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் சட்டையை அணிய காத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இதற்கு முன்பாக ராஞ்சி வீரரும் தோனியின் நம்பிக்கைக்கு உரியவருமான திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த ஆண்டு 8.50 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியில் விளையாடிய திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சி.எஸ்.கே.
தக்கவைக்கப்பட்ட வீரர்களில் பதிரனாவிற்கு ஜோடியாக தொடக்கத்தில் பந்துவீச யாரை ஏலத்தில் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் கலீல் அகமதுவை 4.80 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து அசத்தியது சி.எஸ்.கே.
இதேபோல் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை அணி. குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடிய நூர் அகமதுவை ஆர்.டி.எம் கார்டு மூலம் அந்த அணி தக்கவைக்க முயற்சிக்க ஏலத்தில் கேட்கப்பட்ட 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடியாக ஏலத்தை அதிகரித்து தங்கள் அணிக்கு இழுத்துள்ளது சென்னை அணி. இவர் ஏற்கனவே அமெரிக்கா லீக்கில் பங்கேற்றுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியில் தமிழ்நாடு வீரர்கள் இல்லையே என்ற கேள்விக்கு மற்றொரு வீரரை ஏலம் எடுத்து பதிலடி கொடுத்துள்ளது சி.எஸ்.கே நிர்வாகம். அஸ்வினுக்கு அடுத்தபடியாக ஆல்ரவுண்டரும் தமிழ்நாடு அணியின் கேப்டனுமான விஜய் சங்கரை 1.20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
விஜய் சங்கர் 2014ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவுள்ளார்.