உலகம்
Jharkhand Election Results: ஷிபு சோரன் குடும்பம் பின்னடைவு.. தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலில் ஜார்க்கண்ட் மக்களின் முடிவு என்ன?

Jharkhand Election Results: ஷிபு சோரன் குடும்பம் பின்னடைவு.. தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலில் ஜார்க்கண்ட் மக்களின் முடிவு என்ன?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தம் 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் என்டிஏ கூட்டணி 41 இடங்கள், இந்தியா கூட்டணி 32 இடங்கள் முன்னிலை என்று இருந்தன. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி அந்த எண்ணிக்கையை தொட்டது.
ஆனால் சில மணிநேரங்களில் இந்த டிரெண்ட் அப்படியே மாறியது. திடீரென இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்தது. அதன்படி, இந்தியா கூட்டணி 54 இடங்களிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி 27 இடங்களில் முன்னிலை வகித்தது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 14, ஜேஎம்எம் 33, ஆர்ஜேடி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல் என்டிஏ கூட்டணி கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல்:
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. பின்னர், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட, ஜார்க்கண்ட் அரசியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
இதன்பின் நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின் ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளியே வந்தார். எனினும், அவர் சிறை சென்ற சமயத்தில் தனது தந்தை காலத்தில் இருந்தே விசுவாசியாக இருந்த சம்பாய் சோரனை முதல்வராக்கினார் ஹேமந்த்.
ஜாமீனில் வெளியேவந்த பின்னர் சம்பாய் சோரனின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, ஹேமந்தே மீண்டும் முதல்வராக அரியணை ஏறினார். இதில் அதிருப்தி அடைந்த சம்பாய் சோரன் 4 ஜேஎம்எம் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார்.
இதனால், ஹேமந்த் சோரனுக்கும், கட்சிக்கும் பலத்த நெருக்கடி உருவானது. இதற்கு மத்தியில் தான் சட்டசபை தேர்தலும் வர, நெருக்கடிகளை சமாளிக்க தனது குடும்பத்தில் (ஷிபு சோரன் குடும்பம்) இருந்தே பலரை வேட்பாளராக்கினார் ஹேமந்த் சோரன்.
அதன்படி, ஹேமந்த் சோரன், அவரின் மனைவி கல்பனா சோரன், இளைய சகோதரர் பசந்த் சோரன் ஆகிய மூவரும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கினர். இவர்களை தவிர, ஷிபு சோரன் குடும்பத்தில் இருந்து இன்னும் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டார். அவர், ஹேமந்த் சோரனின் அண்ணன் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன். சீதாவை பொறுத்தவரை எதிர் தரப்பில் இணைந்து பாஜக சார்பில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை நிலை என்ன?
ஹேமந்த் சோரன், பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளரை விட 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாகவே தெரிகிறது.
கல்பனா சோரனை பொறுத்தவரை பெரிய அரசியல் அனுபவம் கொண்டவர் இல்லை. ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்ற சமயத்தில்தான் கல்பனா அரசியலுக்குள் வந்தார் என்பதால், இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால், கல்பனா பின்னடைவை சந்தித்து வருகிறார். காண்டே சட்டமன்றத் தொகுதியில் களம்கண்ட கல்பனா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் முனியா தேவியை விட 3,621 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
அதேநேரம், தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்தின் சகோதரர் பசந்த் சோரன், பாஜகவின் சுனில் சோரனை விட 2300 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
சீதா சோரன்: ஹேமந்த் சோரனின் அண்ணன் துர்கா சோரனின் மனைவியான சீதா, தனது கணவர் மறைவுக்கு பிறகே அரசியலுக்கு வந்தார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறை சென்ற திரும்பிய அவர் ஜம்தாரா தொகுதியில் பாஜக சார்பில் களம்கண்டார். அவர் காங்கிரஸின் இர்பான் அன்சாரியை விட 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு, சிறை, ஜாமீன் என கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஷிபு சோரன் குடும்பம் அரசியல் ரீதியாக சில பல பிரச்சனைகளை சந்தித்தது. இந்த நெருக்கடியில் இருந்து மீள, தங்களின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அக்குடும்பம், அதற்காக தனது குடும்பத்தில் இருந்தே வேட்பாளர்களை களமிறக்கியது.
‘குடும்ப அரசியல்’ குற்றச்சாட்டுகளை மீறி, தங்கள் குடும்பத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக அணுகியது. ஆனால் ஹேமந்த் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றே தோன்றுகிறது. கட்சியாக ஜேஎம்எம் மீண்டும் இரண்டாவது முறையாக அரியணையை நோக்கி முன்னேறிவரும் நிலையில், குடும்பமாக ஷிபு சோரன் குடும்பம் சிறப்பாக செயல்படவில்லை.
சோரன் குடும்பத்தில் இருந்து இத்தனை பேர் போட்டியிட்டும், அவர்களில் ஹேமந்த் மட்டுமே வெற்றிக்கு அருகில் உள்ளார். மற்றவர்கள் பின்னடைவை சந்தித்திருப்பது மக்கள் குடும்ப அரசியலை அங்கீகரிக்கவில்லையா என்றே எண்ண வைக்கிறது.
