உலகம்
Jharkhand Election Results: ‘ஹெலிகாப்டர் மேடம்’.. ‘COUPLE GOAL’ – கணவரை முதல்வர் அரியணையில் ஏற்றிய ஜார்க்கண்டின் சிங்கப் பெண்!

Jharkhand Election Results: ‘ஹெலிகாப்டர் மேடம்’.. ‘COUPLE GOAL’ – கணவரை முதல்வர் அரியணையில் ஏற்றிய ஜார்க்கண்டின் சிங்கப் பெண்!
ஜார்க்கண்டில் எதிர்க்கட்சிகளின் வியூகங்களை தவிடுபொடியாக்கி, அனல் பறக்கும் பரப்புரையால் மீண்டும் தனது கணவரை முதலமைச்சர் அரியணையில் அமரவைத்துள்ளார், கல்பனா சோரன். அவர் குறித்து பார்க்கலாம்..
2019-இல் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்ற சில நாட்களில் வெளியான படத்தில், கணவரின் அருகே மிக எளிமையாக அமர்ந்திருந்த கல்பனா சோரன், இன்று நாடே வியந்து பார்க்கும் பெண்மணியாக உருவெடுத்துள்ளார். அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் மருமகளாக வந்தாலும், அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த கல்பனாவை, ஜார்க்கண்ட் அரசியலின் ஆணிவேராக மாற்றியது காலமும், சூழலும். ஹேமந்த் சோரனின் ஆட்சி 4 ஆண்டுகளை கடந்து, தேர்தலை எதிர்நோக்கியிருந்த நிலையில், திடீரென அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.
தலைவனை இழந்த கூட்டம் சிதறிவிடும் என எதிர்த்தரப்பு கணக்கு போட்டுக் கொண்டிருந்த வேளையில், அதிரடியாக அரசியலில் களம் புகுந்தார் கல்பனா சோரன். ஹேமந்த் சோரன் சிறை சென்ற போது, அவரது மனைவி கல்பனா முதலமைச்சராவார் என கூறப்பட்ட நிலையில், ஒடிசாவை பூர்வீகமாகக் கொண்டவர் ஜார்க்கண்டில் முதலமைச்சராவதா என்ற குரல் ஒருபுறம் எழுந்தது. இதனால், அப்போது முதலமைச்சர் பதவி சம்பாய் சோரனுக்குச் சென்றது.
எனினும், கட்சியை கையில் எடுத்த ராணுவ வீரரின் மகளான கல்பனா, கணவர் ஹேமந்த் சிறையில் இருந்த போது, அவரின் முகமாக தேர்தல் களத்தில் கம்பீரமாக எதிரொலித்தார். பொறியியல் பட்டதாரியான கல்பனா, அரசியல் களத்தில் பொறி பறக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது நடந்த காண்டே தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட கல்பனா சோரன், 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார். பின்னர், ஹேமந்த் சோரன் பிணையில் வெளிவந்து முதலமைச்சரானவுடன், இடைக்காலத்தில் முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்தார்.
இதனால், பழங்குடி மக்களின் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்தபோது, மீண்டும் ஆட்சியை பிடிப்பதே தங்களின் “COUPLE GOAL” என களமிறங்கினர் ஹேமந்த் – கல்பனா தம்பதி.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய கல்பனா சோரன், சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாளொன்றுக்கு 5 பொதுக்கூட்டங்கள் வீதம் பங்கேற்று மாநிலம் முழுவதும் சுழன்றார். இதனால், கல்பனா சோரனை ‘ஹெலிகாப்டர் மேடம்’ என்றும் பாஜக விமர்சித்தது.
இவரது பேச்சு அரசியல் உரைகளாக அல்லாமல், பழங்குடி பெண்களை ஈர்க்கும் வகையில் எளிமையாக இருந்தது.
இறுதிக்கட்ட பரப்புரை காலத்தில், கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, செல்போன் மூலமாக கூட்டத்தில் உரையாற்றி லைக்குகளை அள்ளினார். தற்போது காண்டே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை தக்கவைத்துள்ளார்.
கணவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியில் அமர்வது மட்டுமல்ல, ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல் முறையாக, ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதற்கும் முக்கிய காரணியாக மிளிர்கிறார் கல்பனா சோரன்.
“COUPLE GOAL”-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்த ஹேமந்த் – கல்பனா தம்பதி, தற்போது ஜார்க்கண்டின் POWER COUPLE-ஆக உருவெடுத்துள்ளனர்.
அரசியலில் நுழைந்த 9 மாதத்தில் புயல் போல, ஜார்க்கண்ட் அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்டு, ஜார்க்கண்டின் சிங்கப்பெண்ணாக வலம் வருகிறார் கல்பனா சோரன்.