உலகம்
Maharashtra Election Results: “தேர்தல் முடிவுகளில் முறைகேடு.. இது மக்கள் முடிவு இல்லை” – உத்தவ் அணி பகீர் குற்றச்சாட்டு

Maharashtra Election Results: “தேர்தல் முடிவுகளில் முறைகேடு.. இது மக்கள் முடிவு இல்லை” – உத்தவ் அணி பகீர் குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் இன்று (23-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான கூட்டணி, 223 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகின்றன. இதில் சில தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னிலை நிலவரத்தின் அடிப்படையில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக கூட்டணி குறித்து விமர்சித்துள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத், “மகாயுதி கூட்டணி தேர்தல் முடிவுகளில் முறைகேடு செய்து சில தொகுதிகளை எங்களிடம் இருந்து திருடிவிட்டது. இது மக்களின் முடிவு அல்ல. மக்களே இந்த முடிவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஷிண்டே 60 தொகுதிகளிலும், அஜித் பவார் 40 தொகுதிகளிலும், பாஜக 125 தொகுதிகளிலும் வெல்வது என்பது சாத்தியமா? மகாராஷ்டிரா மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல” என்று தெரிவித்தார்.
சஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்திற்கு உடனடியாக பதில் தந்த பாஜக தலைவர் பிரவின் தரேகர், “மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி இருப்பதன் மூலம், மகாராஷ்டிரா வளர்ச்சி அடையும். இந்த முடிவுகள் மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் :
Wayanad By Election: அண்ணனை விஞ்சிய தங்கை! – வயநாட்டில் வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்திய பிரியங்கா காந்தி
பாஜகவின் மற்றொரு தலைவரான ஷேசாத் பூனவல்லா, “சஞ்சய் ராவத் மன ரீதியாக நிலைதடுமாறி இருக்கிறார். மகாராஷ்டிராவில் இருக்கும் எவரும் அவருக்கு கவனம் கொடுக்கமாட்டார்கள். பல சமயங்களில் அவர் ஜோக்கர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். இன்று அவர் ஜோக்கர் போலதான் பேசியும் வருகிறார். வயநாடு இடைத் தேர்தல் மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகளிலும், ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளிலும் இவர்களுக்கு இவிஎம் மீது நம்பிக்கை இருக்கும்” என்று தெரிவித்தார்.