உலகம்
Maharashtra Election Results: பாஜக கூட்டணியில் முதல்வர் தேர்வில் சர்ச்சையா? – ஃபட்னாவிஸ் விளக்கம்!

Maharashtra Election Results: பாஜக கூட்டணியில் முதல்வர் தேர்வில் சர்ச்சையா? – ஃபட்னாவிஸ் விளக்கம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் இன்று (23-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
இதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 187 இடங்களில் வெற்றி, 48 இடங்களில் முன்னிலை என 235 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி 42 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை என மொத்தம் 49 இடங்களை தன் வசம் வைத்துள்ளது.
இதில் பாஜக கூட்டணியில் பாஜக மட்டும் தனித்து 140 தொகுதிகளுக்கும் மேலாகவும், ஷிண்டே சிவசேனா 70 இடங்களுக்கும் மேலாகவும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 50 இடங்களுக்கும் மேலாகவும் போட்டியிட்டது. இந்தக் கூட்டணியிலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியிலும் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தன.
இதையும் படியுங்கள் :
Maharashtra Election Results: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.. ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்!
இதில், தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் பாஜக தலைவரும், தற்போதைய துணை முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் பிரஃபுல்லா வினோத் ராவ் போட்டியிட்டார். இதில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மொத்தம் 1,29,401 வாக்குகளையும், பிரஃபுல்லா 89,691 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், தேவேந்திர ஃபட்னாவிஸ் 39,710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “யார் முதலமைச்சர் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. மூன்று கட்சி தலைவர்களும் அமர்ந்து பேசி யார் முதலமைச்சர் என சுமுகமாக முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.