உலகம்
Maharashtra Election Results: மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார்? – ஏக்நாத் ஷிண்டே சொன்ன பதில்

Maharashtra Election Results: மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார்? – ஏக்நாத் ஷிண்டே சொன்ன பதில்
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.
288 தொகுதிகளுக்கான மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக 145 இடங்களிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 81 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
மறுபுறம் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், காங்கிரஸ் கட்சி 102 தொகுதிகளிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) 92 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 86 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மகாயுதி கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 215 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 65 இடங்களிலும், மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதில் பாஜக 125 இடங்களிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 56 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 39 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இதையும் படிக்க:
ஷிபு சோரன் குடும்பம் பின்னடைவு.. ஜார்க்கண்ட் மக்களின் முடிவு என்ன?
இந்த முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஷிண்டே, அஜித் பவார் மற்றும் பாஜக தலைவர்களின் இல்லங்களில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடினர். இதனையடுத்து மகாராஷ்டிராவில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே முதலமைச்சராக உள்ள ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகத் தொடர்வாரா இல்லை பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளதால் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக்கப்படுவாரா இல்லை அஜித் பவாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “நாங்கள் அனைவரும் ஒன்றாகத் தான் தேர்தலை சந்தித்தோம். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு, 3 கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.