உலகம்
Wayanad By Election: அண்ணனை விஞ்சிய தங்கை! – வயநாட்டில் வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்திய பிரியங்கா காந்தி

Wayanad By Election: அண்ணனை விஞ்சிய தங்கை! – வயநாட்டில் வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்திய பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனது அண்ணன் ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்து பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.
2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் வயநாடு தொகுதியில் இருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வயநாடு காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிட்டன.
இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அதேநேரம் எல்டிஎஃப் கூட்டணி சார்பில் சத்யன் மோகரியும், என்டிஏ சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிட்டனர். இன்றைய வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே பிரியங்கா காந்தி மற்ற வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.
தற்போது வரை, பிரியங்கா காந்தி 6 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை தன்வசம் ஆக்கியுள்ளார். இதன்மூலம் பிரியங்கா காந்தி வயநாட்டின் புதிய எம்.பியாவது உறுதியாகியுள்ளது.
இந்த வெற்றியின் இன்னொரு சிறப்பான அம்சம் என்னவெனில் அண்ணன் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட தங்கை பிரியங்கா காந்தி வயநாட்டில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால், பிரியங்கா காந்தி தற்போது வரை 4,04,619 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இன்னும் இறுதி வாக்கு எண்ணிக்கை அறிக்கை வரவில்லை. எனினும், பிரியங்கா காந்தி தனது அண்ணனை விஞ்சிய தங்கையாக வயநாட்டில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
முன்னதாக, 2019 தேர்தலில் ராகுல் காந்தி 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் இதே வயநாட்டில் வென்றிருந்தார். அந்த சாதனையையும் ராகுல் காந்தி தகர்ப்பாரா என்பது இன்னும் சில மணித்துளிகளில் தெரிந்துவிடும்.