உலகம்
Wayanad By Election: மிஸ்ஸான பிரியங்கா காந்தி? ராபர்ட் வதேரா சொன்ன தகவல்

Wayanad By Election: மிஸ்ஸான பிரியங்கா காந்தி? ராபர்ட் வதேரா சொன்ன தகவல்
2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் வயநாடு தொகுதியில் இருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிட்டன.
இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அதேநேரம் கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிட்டனர். இன்றைய வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே பிரியங்கா காந்தி மற்ற வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி பிரியங்கா காந்தி மொத்தம் 6,22,338 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோகரியை விட 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதன்மூலம் பிரியங்கா காந்தி வயநாட்டின் புதிய எம்.பியாவது உறுதியாகியுள்ளது. இன்னும் வயநாடு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி முன்னேறி வருவது செய்தியாளர்களிடம் பேசிய அவரது கணவர் ராபர்ட் வதேரா, “வயநாடு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் பிரியங்காவின் உழைப்பை அவர்கள் அங்கீகரித்துள்ளனர். மக்களின் பிரச்சனைகளை பிரியங்கா நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என நான் எப்போதும் நினைப்பேன். நிச்சயம் அவர் வரலாற்று வெற்றியைப் பெறுவார்” என்றார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது பிரியங்கா என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு, “பிரியங்கா புத்தகங்களைப் படித்துக்கொண்டும், வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தையும் செலவு செய்துகொண்டிருக்கிறார். தேர்தல் முடிவில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அவருக்கு நாட்டின் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் :
Maharashtra Election Results: “தேர்தல் முடிவுகளில் முறைகேடு.. இது மக்கள் முடிவு இல்லை” – உத்தவ் அணி பகீர் குற்றச்சாட்டு
வயநாடு தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய பாஜக வயநாடு வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், “வாக்கு எண்ணிக்கை துவங்கியபோது எங்களுக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது. காரணம் நாங்கள் மக்களிடம் வயநாடு வளர்ச்சியைக் குறித்துப் பேசினோம். ஆனால் எதிர்பாராதவிதமாக, வாக்குப் பதிவு மிகவும் குறைவாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பாஜகவால் எட்ட முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் எந்தத் துறையிலுமே ஒரு வேலைக்கூட நடக்கவில்லை.
வயநாடு மக்கள் பல ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதுக்கூட நிறைவேற்றப்படவில்லை. அடுத்த ஐந்து வருடமும் இப்படியே தான் இருக்கப் போகிறது. பிரியங்காவும் வயநாடு தொகுதிக்கு வெறும் பார்வையாளராகவே வந்து செல்வார்” என்று தெரிவித்தார்.