திரை விமர்சனம்
அஞ்சாமை திரைவிமர்சனம்

அஞ்சாமை திரைவிமர்சனம்
[புதியவன்]
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் வசிக்கும் தெருக்கூத்துக் கலைஞரான சர்க்கார் (விதார்த்), மனைவி சரசு (வாணி போஜன்) கோபப்பட்டதற்காக அந்த வேலையை விட்டுவிட்டு பூ வியாபாரத்தில் ஈடுபடுகிறார். அவர்களுக்கு மகன் அருந்தவம் (கிரித்திக் மோகன்), மகள் தன்யா இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் மாணவனாக தேர்வுபெற்ற அருந்தவம், மேற்கொண்டு படித்து மருத்துவராக ஆசைப்படுகிறார். அப்போது ஒன்றிய அரசு அமுல்படுத்திய நீட் தேர்வு சர்க்காரையும், அருந்தவத்தையும் கஷ்டப்படுத்துகிறது.
ஜெய்ப்பூர் பரீட்சை மையத்துக்கு மகனை நுழைவுத்தேர்வு எழுத தொடரூந்தில் அழைத்துச் சென்ற சர்க்கார், திடீரென்று மரணம் அடைகிறார். பிறகு என்ன நடக்கிறது? அருந்தவத்தின் மருத்துவர் கனவு நிறைவேறியதா? அவருக்கு உதவும் பொலிஸ் ரஹ்மானின் கதி என்ன என்பது மீதி கதை. வெள்ளந்தியான தெருக்கூத்துக் கலைஞராகவும், பூ வியாபாரியாகவும் விதார்த் வாழ்ந்திருக்கிறார். வாணி போஜனுக்கு இது முக்கியமான படம். மனைவியாகவும், தாயாகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்.
கிரித்திக் மோகன், நீட் தேர்வு தரும் வலியை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். பொலிஸாகவும், வழக்கறிஞராகவும் ரஹ்மான் நியாயமான நடிப்பை வழங்கி, இவ்வளவு நேர்மையானவரை நேரில் பார்க்க முடியாதா என்று ஏங்க வைக்கிறார். மகளை நீட் தேர்வுக்கு அழைத்துச் சென்று அல்லல்படும் ரேகா நாயர், நீதிபதி பாலச்சந்திரன், அமைச்சர் விஜய் பாபு ஆகியோரும் மனதில் பதிகின்றனர்.
நீட் தேர்வின் கோரமுகத்தையும், அதை வைத்து பயிற்சி நிலையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கின்றனர் என்ற உண்மையையும் தோலுரித்துக் காட்டிய இயக்குனர் எஸ்.பி.சுப்புராமனின் துணிச்சலுக்கு ஒரு வணக்கம்.
உண்மையான சில விஷயங்களை திரையில் சொல்லும்போது யதார்த்தத்தை மீற முடியாது என்பதால், சில காட்சிகள் மனதை உலுக்குவதற்குப் பதிலாக, வசனங்களால் கடந்து சென்றுவிடுகிறது. அதில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். நீதிபதியின் தீர்ப்பை ஆரம்பத்திலேயே கணித்துவிட முடிகிறது. நீட் தேர்வு விஷயத்தில் கேள்விகளை மட்டும்தான் கேட்க முடிகிறதே தவிர, அதற்கான தீர்வை யாராலும் சொல்ல முடியவில்லை என்பதே யதார்த்தம்.
கார்த்திக்கின் ஒளிப்பதிவு திண்டுக்கல் கிராமத்தின் இயற்கை அழகையும், ஜெய்ப்பூர் நீட் தேர்வு மையத்தின் பரபரப்பையும், நீதிமன்றக் காட்சிகளின் உணர்வுகளையும் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளது. ராகவ் பிரசாத்தின் இசையும், கலா சரணின் பின்னணி இசையும் கதையை விட்டு நகராமல் பயணித்து வலிமை சேர்த்துள்ளன. நீட் தேர்வின் அவலங்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ள இப்படம், படிப்பால் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கும், அவர்களுக்கு உதவும் குடும்பத்தினருக்கும் சமர்ப்பணம். [எ]