கதைகள்
பணிவு வேண்டும் | Be humble | Tamil stories to read

பணிவு வேண்டும் | Be humble | Tamil stories to read
மௌரிய வம்சத்தின் தலைசிறந்த மன்னர் அசோகர். கலிங்கப்போரே இவர் செய்த கடைசி போர். அந்தப் போரில் வீரர்கள் பட்ட வேதனைகளை கண்டு மனம் மாறி, இனி தான் போரே செய்வதில்லை என்று முடிவெடுத்து நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்தி தலைசிறந்தவராக விளங்கினார்.
புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு அதில் தம் மகளையும் மகனையும் ஈடுபட செய்த பெருமைக்குரியவர் அவர்.
இத்தகைய பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான மாமன்னர் அசோகர். ஒருநாள் தனது ஆலோசகர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் முனிவர் ஒருவர் வந்தார்.
மாமன்னர் அசோகர் அந்த முனிவரை பார்த்ததும் ஓடிப்போய் காலில் விழுந்து வணங்கினார். இச்செயல், அருகில் இருந்த அமைச்சருக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர் அசோகரை பார்த்து, “மாமன்னரே மிகப்பெரிய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் தலையானது சாதாரண ஒரு முனிவரின் காலில் படுவதா?” என்று கேட்டார்.
அதற்கு பேரரசர் அசோகர் எந்த பதிலும் கூறாமல் லேசாக சிரித்தபடியே சென்று விட்டார்.
பிறகு ஒரு நாள் அமைச்சரை கூப்பிட்டு, “அமைச்சரே, எனக்கு ஒரு ஆட்டின் தலை, அடுத்ததாக ஒரு புலியின் தலை, மூன்றாவதாக ஒரு மனிதனின் தலை என மூன்று தலைகள் வேண்டும்” என்றார்.
அமைச்சர் மிகவும் சிரமப்பட்டு மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு அரசரின் முன் வந்தார்.
அவற்றை பார்த்த மாமன்னர் அசோகர், “மிகவும் நல்லது. இப்பொழுது இந்த மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு போய் சந்தையில் விற்றுவிட்டு வாருங்கள்” என்றார்.
சந்தையில் ஆட்டின் தலையை சிறந்த விலைக்கு ஒருவர் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
புலி தலையை வீட்டில் மாட்டிக் வைக்கலாம் என்று எண்ணி ஒருவர் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
அந்த சந்தையில் மனித தலையை மட்டும் வாங்க ஒருவருமே முன்வரவில்லை.
அமைச்சர் அரசரிடம் திரும்பி வந்து, “மாமன்னரே, ஆட்டுத்தலையையும் புலி தலையையும் மக்கள் வாங்கி சென்று விட்டனர். ஆனால், மனித தலையை மட்டும் எவருமே விலை கொடுத்து வாங்க முன் வரவில்லை” என்றார்.
அதற்கு அரசர் அமைச்சரை பார்த்து, “அமைச்சரே, மனித தலையை இலவசமாகவே கொடுத்து விடுங்கள்” என்றார்.
“சரி”, என்று சொல்லிவிட்டு சென்றார் அமைச்சர். மனித தலையை இனாமாக கொடுக்க முன் வந்தும் யாரும் அதனை வாங்க முன்வரவில்லை.
மறுபடியும் அமைச்சர் மன்னரை சந்தித்தார்.
இப்பொழுது அசோகர் அமைச்சரை பார்த்து, “அமைச்சரே, பேரரசனாக இருக்கும் என் தலைக்கும் இது பொருந்தும். உயிர் இருக்கும் வரையில்தான் இந்த மனித தலைக்கு மதிப்பு. உயிர் போன பிறகு அதன் மதிப்பும் போய்விடுகிறது. எனவே, மதிப்பு இருக்கும்போதே தலையால் பெரியோர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி அந்த புனிதத்தைப் பெற்றுக் கொள்வது நல்லது. அதுவே பணிவு இந்த பணிவு அனைவருக்கும் வேண்டும்” என்றார்.
நீதி : பெரியோர்களிடம் பணிந்து நடக்க வேண்டும். பணிந்து நடப்பவர்களை தான் அனைவரும் விரும்புவார்கள்.