உலகம்
பலஸ்தீன போராட்டம் அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இரத்து!

பலஸ்தீன போராட்டம் அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இரத்து!
பலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக அவுஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இது, அவுஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் நகரத்தின் முக்கிய வீதியாக திகழும் போர்க் ஸ்ட்ரீட் வணிக வளாகத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இது, குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக இருக்கும். இந்தநிலையில், அங்குள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் போர் எதிர்ப்பு ஆர்வலர் ஆமி செட்டால் ஆகியோர், இஸ்ரேல் தாக்குதலில் பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவதை கண்டிக்கும் வகையில் நடப்பாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை புறக்கணிப்போம் என்று சமூக ஊடகங்களின் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனிடையே, போர்க் ஸ்டீரிட் வணிக வளாகத்தில் உள்ள ரீடெயில் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மியர்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்க திட்டமிட்டிருந்தது.
இது குறித்து அறிந்த போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வணிக வளாகத்துக்கு வெளியே போராட்டங்களையும் நடத்தினர். எங்களது போராட்டம், அமைதியான,வன்முறையற்ற போராட்டமாக தொடரும் என்று சமூக ஆர்வலர் ஆமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட மியர்ஸ் ரீடெயில் நிறுவனம் ஆண்டுதோறும் வழக்கமாக நடத்தப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த பலஸ்தீன ஆதரவாளர்கள் வணிக வளாகத்துக்கு வெளியே நடைபெற்ற தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். (ப)