உலகம்
வரலாற்றில் முதல்முறை… இலங்கை நாடாளுமன்றத்தில் தடம் பதிக்கும் மலையகத் தமிழ் பெண்கள்!

வரலாற்றில் முதல்முறை… இலங்கை நாடாளுமன்றத்தில் தடம் பதிக்கும் மலையகத் தமிழ் பெண்கள்!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான கூட்டணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக மலையகத் தமிழ் பெண்கள் 2 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைத் தீவில் வீசிய ஏகேடி அலையால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வாரிச் சுருட்டியுள்ளது ஆளும் கட்சி. பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் பொருளாதார முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன்நிறுத்திக் களமிறங்கி புதிய புரட்சியாக உருவெடுத்தார் அநுர குமார திசநாயக்க என்ற ஏகேடி. அதிபராகப் பதவியேற்ற அடுத்த நாளே நாடாளுமன்றத்தைக் கலைத்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 225 இடங்களில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும், 29 பேர் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர். வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிபர் ஏகேடி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி 40 இடங்களையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8 இடங்களையும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி 5 இடங்களையும் பெற்றன. ராஜபக்ச குடும்பத்தினர் தலைமையில் இயங்கும் இலங்கை பொதுஜன பெரமுனா 3 இடங்களை மட்டுமே பெற்றது.அதிபர் தேர்தலில் வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாமல், விருப்ப வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற ஏகேடி, தற்போது, 61 புள்ளி ஐந்து ஆறு சதவீத வாக்குகளை அள்ளியிருக்கிறார். அதிபர் தேர்தலில் 32 சதவீத வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாசா தற்போது 17 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். 17 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே 5 சதவீதத்தைக் கூடத் தொடவில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் மூன்று இடங்களை மட்டுமே பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, தற்போது வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.கொழும்பில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஹரிணி அமரசூரிய, அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற உறுப்பினர் என்ற முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார். இதனிடையே, ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இருந்த எந்த அமைச்சரும் மீண்டும் வெற்றி பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.மேலும், இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர். ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் நுவரெலியாவில் போட்டியிட்ட கலைச்செல்வியும், பதுளையில் போட்டியிட்ட அம்பிகா சாமுவேலும் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்து புதிய வரலாறு படைத்துள்ளனர்.இலங்கை மலையக மக்களுக்கு 1977-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் நிலையில், 47 ஆண்டுகளில் முதல் முறையாகப் பெண்கள் தேர்வாகியுள்ளனர். இது தவிர, தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் அதிபர் அநுர குமார திசநாயக்க கொடி நாட்டியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் முதல் முறையாகச் சிங்களரான ஏகேடியைத் தலைமையாகக் கொண்ட கட்சி வெற்றி பெற்றுள்ளது. திரிகோணமலை, வன்னி, அம்பாறையையும் கைப்பற்றியது. வடக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட 7 இடங்களில் மட்டுமே இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றது.அதிபர் தேர்தலின் போது சஜித் பிரேமதேசவுக்கு தமிழர் பகுதிகளில் அதிக ஆதரவு இருந்த நிலை, தற்போது மாறியது. அதிபராகத் தேர்வான பின்னர், தமிழர் பகுதியில் 34 ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலாலி – அச்சுவேலி பிரதான சாலையைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்க அநுர குமார உத்தரவிட்டார். இது தமிழ் மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.மேலும், தெற்கு – வடக்கு என இன பாகுபாடு இருக்காது, அரசு வசம் உள்ள தமிழர் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என ஏகேடி அறிவித்ததும் அவருக்கான ஆதரவைப் பன்மடங்கு உயர்த்தியது. இதனால், வரலாற்றில் முதல்முறையாகச் சிங்களரைத் தலைமையாகக் கொண்ட கட்சிக்குத் தமிழர்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.இதற்கு முன் இருந்த தலைவர்கள் சிங்களத் தலைவர்களாகவே தங்களை வெளிப்படுத்த முயன்ற நிலையில், அதற்கு மாற்றாக நின்ற அநுர குமார திசநாயக்க தமிழர்கள், இஸ்லாமியர்களின் பெரும் ஆதரவையும் பெற்றுள்ளதால், அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் தலைவராக இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.