திரை விமர்சனம்
ஹரா திரைவிமர்சனம்

ஹரா திரைவிமர்சனம்
[புதியவன்]
ஊட்டியில் தனது மனைவி அனுமோல், மகள் சுவாதியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார், மோகன். மாணவி சுவாதி, திடீரென்று தொடரூந்து முன் விழுந்து உயிர்மாய்த்துக் கொள்கிறார். இதனால் மோகன் குடும்பம் தடுமாறுகிறது. ஊட்டியில் ராம் ஆக இருந்த அவர், பிறகு கோவைக்கு வந்து தாவூத் இப்ராஹிம் ஆகி, தலைமறைவாக இருந்தபடி, தனது மகளின் உயிர்மாய்ப்புக்கு யார் காரணம் என்று விசாரிக்கிறார். இதற்கு முன்னால் மோகனால் பாதிக்கப்பட்டு பொலிஸ் வேலையை தற்காலிகமாக இழந்த ஜெய்குமார், மோகனை வலைவீசி தேடுகிறார்.
மகளின் உயிரிழப்புக்கு யார் காரணம்? பொலிஸிடம் இருந்து மோகன் உயிர் தப்பினாரா என்பது மீதி கதை. பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கும் மோகன், மகளின் உயிர்மாய்ப்புக்கு நியாயம் தேடி அலையும் காட்சிகளில் உருக வைக்கிறார். மனைவியை விட மகள் மீது உயிரையே வைத்திருக்கும் அவர், மகளுக்கு நேர்ந்த கொடூரத்தை மனைவியிடம் மறைத்து தவிக்கும்போது கண்களை குளமாக்குகிறார்.பாசமுள்ள தாயாக வந்து பரிதாபத்தை அள்ளும் அனுமோல், மகளைப் பற்றிய மர்மத்தை அறிந்து துடிப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது. மகளாக சுவாதி மனதில் அழுத்தமாகப் பதிகிறார்.
யோகி பாபு, தீபா சங்கரின் திருஷ்டிப் படிகாரம். ரஷாந்த் அர்வின் இசையில் தந்தை, மகளுக்கான பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை, கதையுடன் இணைந்து பயணித்திருக்கிறது. பிரஹத் முனுசாமி, மனோ தினகரன், மோகன் குமார், விஜய்ஸ்ரீ.ஜி ஆகியோரின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. வழக்கமான பழிவாங்கும் கதையுடன் படம் தொடங்கி, பிறகு மத நல்லிணக்கம், போலி மருந்து வியாபாரம் என்று எங்கெங்கோ செல்கிறது. எழுதி இயக்கிய விஜய்ஸ்ரீ.ஜி பல்வேறு விஷயங்களைத் திணித்திருப்பதால், கதை ஏற்படுத்தி இருக்க வேண்டிய அழுத்தம் குறைவு. [எ]