இந்தியா
பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டம் அமல்படுத்துவதில் தாமதம்; மாநில தழுவிய போராட்டம் – திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டம் அமல்படுத்துவதில் தாமதம்; மாநில தழுவிய போராட்டம் – திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேற்குவங்கத்தில் இந்தச் சம்பவம் பெரும் விவகாரமாக உருவெடுத்தது. மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, மேற்குவங்கத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டத்தை ஏற்ற அரசு முடிவெடுத்து அதற்கான சட்டத்திருத்த மசோதாவை தயார் செய்தது. அதன்படி ‘அபரஜிதா பெண் மற்றும் குழந்தை 2024’ எனும் சட்டத் திருத்த மசோதாவை மேற்குவங்க அரசு தயார் செய்தது.
இந்த மசோதாவை அந்த மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக் சட்டமன்றத்தில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவு தெரிவித்தனர். இதனால், ஒருமனதாக நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தற்போது அந்த மசோதா, மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தெரிகிறது.
இன்று ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகியும், மேற்கு வங்க மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “இந்த மசோதாவிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்காததால், அதனை அமல்படுத்த முடியாததன் காரணத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
‘அபரஜிதா பெண் மற்றும் குழந்தை 2024’ திருத்த சட்டத்தின்படி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழக்க நேர்ந்தால் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகள் மீதான விசாரணை ஆரம்ப அறிக்கை 21 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதம் விதிப்பதும் இந்த புதிய சட்ட மசோதாவில் அடங்கும்.