விநோதம்
Palkova: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சிறப்புப் பெறக் காரணம்… பின்னணியில் ஆண்டாளுக்கு உள்ள தொடர்பு…

Palkova: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சிறப்புப் பெறக் காரணம்… பின்னணியில் ஆண்டாளுக்கு உள்ள தொடர்பு…
ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், தமிழ்நாடு அரசு முத்திரையும் தான். அடுத்தபடியாகத் தனது கமகமக்கும் சுவையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது பால்கோவா. மற்ற ஊர்களிலும் பால்கோவா கிடைக்கும் என்றாலும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த மவுசு தான் 2014ஆம் ஆண்டில் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்குப் புவிசார் குறியீடு பெற்றுத் தந்தது.
பால்கோவா என்பது பாலையும், சர்க்கரையையும் சேர்த்து குறிப்பிட்ட வெப்பநிலையில் கொதிக்க வைத்தால் கிடைக்கும் ஒரு இனிப்பு பொருள். பாலும், சர்க்கரையும் சேர்ந்த இனிப்பு பொருள் என்றாலும் வெறும் பாலும், சர்க்கரையும் மட்டும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு இந்த புகழைப் பெற்றுத் தரவில்லை.
எங்கும் இல்லாத அளவுக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா புகழ்பெறக் காரணம் அதன் தனிச் சுவை தான். இந்த பால்கோவா தனிச்சுவை பெற காரணம் அதில் சேர்க்கப்படும் தரமான பாலும், பக்குவமான தயாரிப்பு முறையும் தான்.
இதையும் படிங்க: மரத்தில் ஏறி இறங்கி ஃபன் செய்த குட்டி சிறுத்தை… பொதுமக்களுக்கு வனத்துறை அட்வைஸ்…
விருதுநகர் மாவட்டத்திலேயே ஶ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் கிடைத்த வளமான புற்களை உண்ட கால்நடைகள் தரும் வளமான பாலை கொண்டு பக்குவமாகத் தயார் செய்யப்படுவதால் பால்கோவா தனித்துவமான சுவை பெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும், பால்கோவாவிற்கும் ஒரு தொடர்பு உண்டு. ஆண்டாள் திருமணமாகி மறுவீடு சென்ற போது சர்க்கரை சேர்த்த திரட்டுப் பாலை படைப்பார்கள். இந்த திரட்டு பால் பால்கோவாவுடன் ஒத்துப்போவதன் காரணமாகப் பால்கோவா தயாரிப்பு ஆண்டாள் காலத்திலேயே தொடங்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆரம்பத்தில் பாலை பதப்படுத்தப் போதிய தொழில்நுட்பம் ஏதும் இல்லாத காரணத்தால் எஞ்சிய பாலை காய்ச்சி பால்கோவா தயார் செய்து வந்தனர். பால்கோவா 19ஆம் நூற்றாண்டில் தான் மிகப்பெரிய வணிகமாக மாறியது. 1921இல் முதல்முறையாக தேவ் சிங் ராஜ்புத் என்பவர் ஆண்டாள் கோவில் அருகில் பால்கோவா கடையைத் தொடங்கினார். பின்னர் பிற பால் உற்பத்தியாளர்கள் அதனைப் பின்பற்றி பால்கோவா தயார் செய்யத் தொடங்க, தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா மிகப்பெரிய வணிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க