இந்தியா
அமெரிக்கா புகாரில் அதானி பெயர் இல்லை! கிரீன் எனர்ஜி விளக்கம்

அமெரிக்கா புகாரில் அதானி பெயர் இல்லை! கிரீன் எனர்ஜி விளக்கம்
அமெரிக்காவில் பதிவானதாக சொல்லப்படும் லஞ்சப் புகாரில், கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜாயின் ஆகியோர் பெயர்கள் இடம்பெறவில்லை என்று அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோலார் திட்டத்தை தங்களுக்கு ஒதுக்க 2,100 கோடி ரூபாய் வரை இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமத்தின் மூத்த அதிகாரிகள் லஞ்சம் வழங்கியதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையே இல்லை என்று கூறியுள்ள அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், அமெரிக்க வெளிநாட்டு ஊழல் தடுப்பு சட்டமான FCPA விதியை அதானி குழுமம் மீறவில்லை என்றும் கூறியுள்ளது. அமெரிக்காவில் பதிவான 5 புகார்களில் எதிலும் கவுதம், சாகர் அதானி மற்றும் வினீத்தின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க சட்டத்துறையால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது முதல் இதுவரை சந்தை மூலதனத்தில் 55 பில்லியன் அமெரிக்க டாலர்களை தங்கள் குழுமம் இழந்துள்ளதாகவும், கடந்தாண்டு அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையால் தங்கள் நிறுவனத்திற்கு 150 பில்லியன் இழப்பை சந்தித்து தற்போதுதான் மீண்டுள்ளதாகவும், புதிய புகாரால் தங்கள் குழுமம் வெகுவான பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.