விளையாட்டு
IPL Auction 2025 : ரூ. 639.15 கோடிக்கு 182 வீரர்களை வாங்கிய அணிகள்… 2 நாட்கள் நடந்த ஏலத்தின் ஹைலைட்ஸ்…

IPL Auction 2025 : ரூ. 639.15 கோடிக்கு 182 வீரர்களை வாங்கிய அணிகள்… 2 நாட்கள் நடந்த ஏலத்தின் ஹைலைட்ஸ்…
ஐபிஎல் ஏலம்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரையொட்டி மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 10 அணிகள் ரூ. 639.15 கோடிக்கு 182 வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளன.
இந்த மெகா ஏலத்தில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த்தை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ. 27 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக ரிஷப் பந்த் உள்ளார்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து விடுவிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதேபோன்று வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடி கொடுத்து கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.
இதேபோன்று நடைபெற்று முடிந்த பெரும்பாலான சீசன்களில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னரை வாங்குவதற்கு எந்த அணியும் முன்வரவில்லை.
சென்னை அணியில் டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவிந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கரன் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த அளவில் சென்னை அணி வலுவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த மெகா ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 18 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட்டை மும்பை அணியும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட்டை பெங்களூரு அணியும் தலா ரூ. 12.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளன.
ஆப்கன் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை சென்னை அணி ரூ. 10 கோடி கொடுத்து வாங்கி வியப்பில் ஆழ்த்தியது. இதேபோன்று 13 வயதாகும் பீகாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ரூ. 1 கோடியே 10 லட்ச ரூபாய் கொடுத்த ராஜஸ்தான் அணி விலைக்கு வாங்கியது.