Connect with us

இந்தியா

அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Published

on

Loading

அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு!

கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், பாஜகவைச் சேர்ந்த மீரட் தொகுதி உறுப்பினர் அருண் கோவில், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், குடும்பத்தோடு பார்க்க தகாததாக அவை இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இவ்விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அருண் கோவில் கேள்வி எழுப்பினார்.

Advertisement

இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “உறுப்பினர் அருண் கோவில் மிக முக்கிய கேள்வியை எழுப்பி இருக்கிறார். சமூக ஊடகங்கள் சில நாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றன. அந்த நாடுகள் வேறு வகையான கலாச்சாரத்தைக் கொண்டிருக்கின்றன. இதேபோல், ஓடிடி தளங்களிலும் ஆபாசம் இருக்கிறது. நமது கலாச்சாரம் மற்றம் சமூகத்தின் நன்மை கருதி இது தொடர்பாக சட்டம் இயற்றப்படும். அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அரசுக்கு தேவை” என பதில் அளித்தார்.

இதனிடையே, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முக்கியமானது என்றும், உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். எனினும், அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதை அடுத்து முதலில் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. சபாநாயகரின் இருக்கைக்கு அருகே வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதே விவகாரம் மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அதானி விவகாரம், டெல்லியில் நடந்த குற்றங்கள், மணிப்பூர் வன்முறை, சம்பால் வன்முறை என 18 பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும், இந்த அவைக்கு என்று பாரம்பரியம் உள்ளது. எனவே, அந்த பாரம்பரியப்படி அவை நடத்தப்படும் என ஜக்தீப் தன்கர் கூறினார்.

இதை ஏற்க மறுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து முதலில் 11.30 மணி வரை அவையை அவைத் தலைவர் ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியதும், மீண்டும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன