இந்தியா
காருக்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்த இந்தியர்

காருக்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்த இந்தியர்
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில், கார் ஒன்றுக்கு தனித்துவமான மற்றும் உணர்ச்சிபூர்வமான இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.
சுமார் 1,500 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வின்போது, 12 வயதான ‘வெகன் ஆர்’ என்ற அதிர்ஸ்ட காருக்கான இறுதிச் சடங்குகளை குஜராத்திய குடும்பம் நடத்தியுள்ளது.
இறுதி நிகழ்வின்போது, 15 அடி ஆழமான குழியில், மேற்கூரையில் சாமந்தி மலர் மாலைகள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட ‘வெகன் ஆர்’ வாகனம் இறக்கப்பட்டது.
இதன்பின்னர், மண் தூவி கார் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில், காரின் உரிமையாளரான சஞ்சய் போலரா, இந்த வாகனம் தனது குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக செழிப்பையும் மரியாதையையும் கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தாம் இந்த காரை ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்வனவு செய்ததாகவும், அது குடும்பத்திற்கு செழிப்பைக் கொண்டு வந்தது. தொழிலில் வெற்றி கண்டது மட்டுமின்றி எனது குடும்பத்துக்கும் மரியாதை கிடைத்தது. எனவே அதை விற்பதற்குப் பதிலாக, தமது பண்ணையில் அடக்கம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்கான காரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கார் புதைக்கப்பட்ட இடத்தில் மரம் ஒன்றை நாட்டவிருப்பதாகவும் பொலரா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுக்காக, பொலரா தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேருக்கு நான்கு பக்க அழைப்பிதழை அனுப்பினார்.
அழைப்பிதழில், “இந்த கார் 2006 முதல் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல் உள்ளது, மேலும் இது எங்களுக்கு நல்ல அதிர்ஸ்டத்தைத் தந்தது. நாங்கள் செழிப்பைப் பெற்றோம், சமூகத்தில் எங்கள் நற்பெயர் உயர்ந்தது.
இந்த கார் எங்கள் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும். அதனால் தான் இந்த காரை புதைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.