திரை விமர்சனம்
டைகர் திரைப்பட விமர்சனம்.

டைகர் திரைப்பட விமர்சனம்.
டைகர்’, ‘டைகர் ஜிந்தா ஹே’, ‘வார்’, ‘பதான்’ ஆகிய படங்களின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில் அடுத்ததாக தமிழ், இந்தி, தெலுங்கில் ரிலீசாகியுள்ள படம் இது. டைகர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர், இந்தியாவின் ‘ரா’ பிரிவு உளவாளி அவினாஷ் சிங் ரத்தோர் என்கிற சல்மான்கான். அவரது மனைவி சோயா என்கிற கேத்ரினா கைஃப், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பிரிவு உளவாளி. எல்லை கடந்து இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்வதுடன் கடந்த பாகம் நிறைவடைந்தது. இந்த பாகத்தில் அவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
ஐஎஸ்ஐ முன்னாள் உளவாளி ஆதிஷ் ரஹ்மான் என்கிற இம்ரான் ஹாஸ்மி, பாகிஸ்தான் பிரதமர் நஸ்ரின் இரானிக்கு (சிம்ரன்) எதிரான ராணுவப் புரட்சியை முறியடித்து, தானே ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிடுகிறார். இதற்காக டைகரின் மனைவி சோயாவைப் பயன்படுத்துகிறார். இந்த திட்டத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து, டைகரின் மகனை பிணைக்கைதியாக வைத்துக்கொள்கிறார். இந்த சதியை டைகர் முறியடித்து, பாகிஸ்தான் பிரதமர் மற்றும் தனது மனைவி, மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
முந்தைய பாகங்களில் எப்படி பொறி பறக்கும் அதிரடி ஆக்ஷனில் தனது அசைன்மெண்டுகளை சல்மான்கான் செய்து முடித்தாரோ அப்படியே இதிலும் சாதித்துள்ளார். முந்தைய பாகங்களில் அவர் எதிரிகளை அழித்தார். இந்த பாகத்தில் எதிரிகளுக்கு நல்லது செய்வது மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவுக்கான பாலமும் அமைத்துள்ளார். இறுதிக்காட்சியில் இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் சிறுமிகள் பாடுவது போல் காட்சி அமைத்து புல்லரிக்க வைத்துள்ளார், இயக்குனர் மனீஷ் சர்மா. படத்தில் இடம்பெறும் சதிகள் மற்றும் அதையெல்லாம் சல்மான்கான் முறியடிக்கும் விதம் எல்லாமே லாஜிக் இல்லாத துப்பாக்கி மேஜிக் என்றாலும், அவற்றையும் ரசிக்கச் செய்துவிடுகின்றனர்.
‘பதான்’ படத்தில் இக்கட்டான நேரத்தில் ஷாருக்கானை சல்மான்கான் காப்பாற்றுவது போல், இப்படத்தில் சல்மான்கானை காப்பாற்றுகிறார் ஷாருக்கான் (கெஸ்ட் ரோல்). அப்போது தியேட்டரில் அனல் பறக்கிறது. ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஆக்ஷனில் இறங்கி அடித்திருக்கிறார், கேத்ரினா கைஃப். அதுவும் ஹாலிவுட் நடிகை மிட்செல் லீயுடன் அவர் போடும் டவல் சண்டை இன்னும் சில காலம் பேசப்படும். கூடவே அம்மா சென்டிமெண்டிலும் உருக வைக்கிறார். ‘ரா’ பிரிவின் தலைவராக ரேவதி, பாகிஸ்தான் பிரதமராக சிம்ரன் (நம்ம சிம்ரன்தான்) ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர். தனுஜ் டிக்குவின் பின்னணி இசை, கதையுடன் இணைந்து பயணிக்கிறது. அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. இறுதியில் ஹிரித்திக் ரோஷன் என்ட்ரி கொடுத்து, 4வது பாகத்தில் தனது இருப்பை உறுதி செய்துவிட்டு செல்கிறார். லாஜிக் பற்றி கவலைப்படாத ஆக்ஷன் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.