திரை விமர்சனம்
திரை விமர்சனம்: கான்ஜுரிங் கண்ணப்பன்

திரை விமர்சனம்: கான்ஜுரிங் கண்ணப்பன்
[புதியவன்]
அதிநவீன கேம் டிசைனராக வேண்டும் என்று, தினமும் இண்டர்வியூவுக்கு சென்று வருபவர் சதீஷ். அவரது பெற்றோர் விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் தாய் மாமன் நமோ நாராயணன் ஆகியோர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். சதீஷுக்கு வீட்டின் பாழடைந்த கிணற்றில் ஒரு விநோதமான பொருள் கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகு ஒன்றைப் பறித்துவிடுகிறார். அதற்குப் பிறகு அவர் தூங்கும்போது மட்டும் கனவுலகிற்கு சென்று, பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அந்த கனவுலகில் உயிர் போனால், நிஜ உலகிலும் உயிர் போகும் என்ற நிலைமை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் சதீஷுக்கு சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவர் ரெடின் கிங்ஸ்லி, சதீஷிடம் 10 லட்ச ரூபாய் கடனை வசூலிக்க அலையும் ஆனந்தராஜ் ஆகியோர், விநோதமான பொருளில் இருக்கும் இறகைப் பறித்துவிடுகின்றனர். இதனால், வீட்டில் தூங்கிய அனைவரும் கனவுலகில் சேர்ந்து மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். பேய்களிடம் இருந்து தப்பித்து, பங்களாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றால், அதற்கான சாவியைக் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும். விநோதமான பொருள் என்ன? சாவி கிடைத்ததா? பங்களாவில் பேய்களாக மாறி மிரட்டுபவர்கள் யார்? கனவுலகம் என்பது என்ன என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
இறகைப் பறித்ததும் ஏற்படும் கனவுலக என்ட்ரியில் இருந்து, வெளியேறத் துடிப்பது வரையிலான குழப்பமான மனநிலையையும், பேய்களைப் பார்த்து பயந்து அலறும் சீரியசையும் வெளிப்படுத்தி, தனக்கு குணச்சித்திர நடிப்பும் வரும் என்று சதீஷ் நிரூபித்து இருக்கிறார். பேய் ஓட்டும் ஸ்பெஷலிட் நாசர், தன் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். அவரது உதவியாளராக வந்து சதீஷ் குடும்பத்துக்கு உதவும் ரெஜினா கெசன்ட்ரா, கொடுத்த வேலையைச் செய்துள்ளார். யாருக்கும் பாடல் காட்சி இல்லை. யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ் கேட்கும் ஆர்வக் கோளாறு அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், மனைவிக்குப் பயப்படும் கணவனாக விடிவி கணேஷும், பெண் என்றாலே வழியும் நமோ நாராயணனும் சிரிக்க வைக்க நடித்துள்ளனர்.
ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர் கோஷ்டி கிச்சுகிச்சு மூட்டுகிறது. பயமுறுத்தும் பேய் வேடத்தில் எல்லி அவ்ரம் நடித்துள்ளார். பாழடைந்த பங்களா, கனவுலகம், பேய்களின் வெறியாட்டம், நிஜ உலகம் என்று, ஒவ்வொரு பகுதிக்கும் எஸ்.யுவா சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா மிரட்டியுள்ளார். மோகன மகேந்திரனின் அரங்க அமைப்பு சிறப்பு. செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். வழக்கமான பேய் பட பாணியிலேயே கதையும், காட்சிகளும் மெதுவாக நகர்வது மற்றும் படத்தின் நீளம் சோர்வு ஏற்படுத்துகிறது. [எ]