இந்தியா
தீவிரமடையும் புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தீவிரமடையும் புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் எனவும், புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வர வாய்ப்பு உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை நவம்பர் 30 ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்து.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 30 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும், புயல் தீவிரமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.