இந்தியா
ரயில் கழிப்பறையில் இருந்த 2 சிறுவர்கள்! சத்தம் கேட்டு மீட்ட போலீசார்…

ரயில் கழிப்பறையில் இருந்த 2 சிறுவர்கள்! சத்தம் கேட்டு மீட்ட போலீசார்…
வடகிழக்கு ரயிலில் பயணித்த இரண்டு சிறுவர்கள், ரயில் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர சோதனையில் இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
“நன்னன் பரிஷ்தே” என்ற குழந்தைகள் மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நடவடிக்கையின் கீழ், தொடர்வண்டி நிலையங்கள் மற்றும் ரயில்களில் தவிக்கும் குழந்தைகளை மீட்பது ரயில்வே பாதுகாப்புப் படையின் முக்கிய பணியாகும்.
கோரக்பூரிலிருந்து சென்ற ரயிலில் வழக்கம்போல போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கழிப்பறையை கடந்து சென்றபோது, அதிலிருந்து சிறுவர்கள் அழும் சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த போலீசார், அந்த கழிவறையை திறக்க முயற்சி செய்துள்ளனர். உள்பக்கத்தில் தாளிடப்பட்டிருந்த அந்த கதவை, பெரும் முயற்சிக்கு பிறகு திறந்து, உள்ளிருந்த 2 சிறுவர்களை மீட்டனர்.
இதையும் படிக்க:
முதல்வர் யார்? “நேரடியாக மோடியிடம் பேசிவிட்டேன்” – ஓப்பனாக சொன்ன ஏக்நாத் ஷிண்டே!
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் பெற்றோர் குறித்து அவர்களால் கூறமுடியவில்லை. யாரோ ஒருவர் அழைத்து வந்து தங்களை கழிப்பறையில் விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த சிறுவர்கள் உடனடியாக அந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், வடகிழக்கு ரயில்வேயில் மட்டும் 644 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பொது இடங்களில் பெற்றோர்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்ததாகவும், ஆதரவற்றவர்களாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.