இந்தியா
இறந்த பின்னும் ரேஷன் வாங்கும் மாயம்! 1.5 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து!

இறந்த பின்னும் ரேஷன் வாங்கும் மாயம்! 1.5 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து!
ஒடிசா மாநிலத்தில் போலியான 1.5 லட்சம் ரேஷன் கார்டுகளை கண்டறிந்து அவற்றை ரத்து செய்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
ஓடிசாவில் 2024-2025 ஆண்டுக்கான ரேஷன் கார்டு சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இது ஆதார் அட்டையின் அடிப்படையில் நடந்து வருகிறது. இதில் பலரும் உயிரிழந்து இருந்தும் அந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படாமல், அவர்களது உறவினர்கள் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி ரேஷன் அட்டைகளை கண்டறிந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் க்ருஷ்ண சந்திர பத்ரா தெரிவித்திருப்பதாவது; “மாநிலத்தில் மொத்தம் 1,77,068 போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. யாரெல்லாம் மரணித்திருக்கிறார்களோ அவர்களின் ரேஷன் கார்டு எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாய் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
மொத்தமுள்ள 3.36 கோடி ரேஷன் பயனாளர்களில் இதுவரை 2.69 கோடி ரேஷன் கார்டுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.