உலகம்
சரக்கு கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்

சரக்கு கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்
செங்கடலில் லைபீரிய நாட்டின் கொடியேற்றப்பட்ட சரக்கு கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
ஹூதிக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு சரக்கு கப்பல்கள் மீது இரு வாரங்களாக ஹூதிக்கள் தாக்குதல் நடத்தாமல் இருந்தனா். இதுகுறித்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவா் இஸ்மாயில் ஹனீயே ஈரானில் அண்மையில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் என நம்பப்பட்டு வரும் சூழலில் ஹூதிக்கள் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனா்.
செங்கடல் பகுதியின் ஏடன் வளைகுடாவில் பயணித்த லைபீரியா கொடியேற்றிய சரக்கு கப்பல் மீது ஹூதிக்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் அந்தக் கப்பல் சேதமடைந்தது. அதில் பயணித்தவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஒருங்கிணைந்த கடல்சாா் தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சவூதி அரேபியாவுக்குச் செல்லும் அந்தக் கப்பல் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டதாகவும் கடல்சாா் மையம் தெரிவித்தது.
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இஸ்ரேல் கப்பல்கள் மட்டுமின்றி அந்த வழியில் பயணிக்கும் பிற நாட்டுக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதால் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் பகுதியில் சரக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. [எ]