இந்தியா
“சென்னை பயணிகள் கவனத்திற்கு” – பயன்பாட்டிற்கு வந்த தாழ்தள பேருந்துகள்… வழித்தடம் நோட் பண்ணிக்கோங்க…

“சென்னை பயணிகள் கவனத்திற்கு” – பயன்பாட்டிற்கு வந்த தாழ்தள பேருந்துகள்… வழித்தடம் நோட் பண்ணிக்கோங்க…
தாழ்தள பேருந்து
குறிப்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக மேடு,பள்ளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தாதவாறும், 66 மி.மீ உயரம் குறைந்து பயணிகள் ஏறியதும் தானாகவே உயர்ந்து கொள்ளும் வசதி, மாற்றுதிறனாளிகள் சக்கர நாற்காலியோடு ஏறி இறங்குவதற்காக சாய்தள வசதி போன்ற பல வசதிகளோடு வடிவமைக்கப்பட்டு தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் குறுகிய பாதைகளில் செல்ல முடியாத காரணங்களால் ஆறு வருடங்களுக்கு முன்பாகவே முற்றிலுமாக தாழ்தள பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது.
மீண்டும் இயக்க பலதரப்பட்ட மக்களும் அரசினை வலியுறுத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சென்னை உயர்நிதிமன்றம் மீண்டும் சென்னையில் குறைந்தபட்சம் 350 தாழ்தள பேருந்துகளை இயக்க அரசினை அறிவுறுத்தியதன் அடிப்படையில் 611 பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கட்டமாக 58 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தாழ்தள பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து 406 பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
தியாகராய நகரிலிருந்து திருப்போரூர் செல்லும் வழித்தடம் எண் 19-ல் 14 பேருந்துகள், பிராட்வேயில் தொடங்கி செங்குன்றம் வரை செல்லும் வழித்தடம் எண் 242-ல் 13 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் தாம்பரத்தில் தொடங்கி மாமல்லபுரம் வரை செல்லும் வழித்தடம் எண் 515 – ல் 13 பேருந்துகள், கிளாம்பாக்கம் தொடங்கி கோயம்பேடு வரை செல்லும் வழித்தடம் எண் 104C -ல் 20 பேருந்துகள், பிராட்வே தொடங்கி கிளாம்பாக்கம் வரை செல்லும் வழித்தடம் எண் 21G -ல் 24 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தொடர்ந்து, கோயம்பேடு தொடங்கி அண்ணா சதுக்கம் வரை செல்லும் வழித்தடம் எண் 27B-ல் 14 பேருந்துகள் மற்றும் அம்பத்தூர் தொடங்கி வேளச்சேரி வரை செல்லும் வழித்தடம் எண் D70 -ல் 21 பேருந்துகள் என சென்னையின் பல வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.