இந்தியா
புயலுக்கு முன்பே இப்படியா? சென்னை என்னவாகும்?

புயலுக்கு முன்பே இப்படியா? சென்னை என்னவாகும்?
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் இன்று(நவம்பர் 30) அதிகாலை முதல் கன மழை பெய்து வருவதால் வீதிகள் ஆறுகளாக காட்சியளித்து வருகிறது.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டு வரும் பகுதிகளை நேரடியாக களத்துக்குச் சென்ற கவரேஜ் செய்தோம்.
சென்னை வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம் எதிரில் துப்புரவு பெண் தொழிலாளி ஒருவர் நம்மை பார்த்து “மணி என்னாச்சு?” என கேட்டார். நாம் நேரத்தை பார்த்து சொன்னோம்.
“காற்று மழை குளிர் நீண்ட நேரமாக வீதியில் நிற்கிறோம். ஐந்து மணி வரை வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்கள்” என்றார் பரிதாபமாக.
அதை கடந்து மெரினா கடற்கரைக்குச் சென்றோம். அங்கே முத்துலட்சுமி மற்றும் பட்டு ஆகிய இரு துப்புரவுத் தொழிலாளர்கள் காற்றுடன் வீசும் கொட்டும் மழையிலும் சாலைகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
அவர்களிடம் மழை நின்ற பிறகு செய்யலாமே என்றோம். மழை நின்றாலும் பெய்தாலும் எங்கள் வேலையை நாங்கள்தான் செய்தாக வேண்டும் என்று பணியில் தீவிரம் காட்டினார்கள்.
அடுத்த நூறு மீட்டர் தூரத்தில் போலீசார், மக்கள் கடற்கரைக்குச் செல்லாமல் வாகனங்களையும், மக்களையும் பேரிகார்டு (இரும்பு தடுப்பு ) போட்டு தடுத்தனர்.
அப்போது விபரம் தெரியாத மக்கள் போலீசாரிடம் வம்படித்தனர். “நாங்கள் பீச்சுக்கு போகணும். எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என கேட்க? அதற்கு போலீசார் ” காற்று மழை அதிகமாகிறது. கடல் அலை வேகமாகிறது. உங்களை பாதுகாக்கத்தான் நாங்கள் மழையில் நனைந்து உங்களை தடுக்கிறோம்” என்றனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாபு மற்றும் லோகேஷ் ஆகிய இரண்டு போலீசார் நாம் ஃபோட்டோ வீடியோ எடுப்பதை பார்த்து நம்மிடம் கோபப் பட்டனர்.
அவர்களிடம் நாம் மின்னம்பலம் செய்தியாளர்கள் என்று அறிமுகம் செய்துக்கொண்டதும், உங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், நாங்களும் மனிதர்கள்தான், ஃபெஞ்சல் புயல் காற்றால் அலை வேகம் அதிகமாக இருக்கிறது, காற்று பலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் கடலுக்கு போக வேண்டும், செல்ஃபி எடுக்க வேண்டும், உள்ளே விடுங்கள் என்று மக்கள் சண்டை போடுகிறார்கள். நாங்களும் விபரங்களை சொல்லி கையெடுத்து கும்பிட்டு போக வைக்கிறோம்.
இருந்தாலும் சில காதல் ஜோடிகளின் செல்ஃபி தொல்லைகள் தாங்க முடியவில்லை. இருந்தாலும் அவர்களிடமும் போராடி வருகிறோம் என்று வேதனை பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பட்டினம்பாக்கம் சென்று பார்த்த போது, அங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு சென்று செல்ஃபி எடுத்துக்கொண்டும், ஃபோட்டோ ஷூட் எடுத்தும், வீடியோ கால் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தவர்களை போலீசார் சென்று மிரட்டி அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.
விபரீதத்தை அறியாத பெற்றோர்கள் பயமறியாத சிறுவர்களை மழை காற்றிலும் கடற்கரைக்கு அழைத்து வந்திருந்த காட்சிகளையும் காண முடிந்தது.
அடையாறு சிக்னலில் இருந்து பெசண்ட் அவென்யு ரோட் ஆறாக காட்சியளித்தது. அதில் வாகனங்கள் நீந்தி சென்றன. டூ வீலர்களில் வந்தவர்கள்தான் தண்ணீரில் நனைந்து, வண்டி ஆஃபாகி நீண்ட தூரம் தள்ளிக்கொண்டே சென்ற பரிதாபங்களையும் காண முடிந்தது.
அதனையடுத்து பரபரப்பாக இருக்க கூடிய சென்னை புதுச்சேரி ஈசிஆர் சாலையில் நெடு நேரமாக பேருந்துகளை காண முடியவில்லை.
இதனை அடுத்து மீண்டும் சென்னையை நோக்கி திரும்பினோம், அடையாறு சைதாப்பேட்டை வழியாக சென்றபோது, வெளச்சேரி-மேடவாக்கம் சாலை முட்டிக்கால் அளவுக்கு மழை தண்ணீர் பெருகெடுத்து ஓடியது.
அதில் ஆட்டோ ஓட்டி சென்ற ஓட்டுனர் கணகராஜ் “இந்த மழைக்கு இவ்ளோ தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழை இப்படி நீடித்தால் படகில் தான் போக வேண்டும் நிலை ஏற்படும்.” என்றார்.
சைதாப்பேட்டை வழியாக வெஸ்ட் மாம்பலம் அரங்கநாதன் சப்வே வழியாக செல்ல முயன்ற போது, அந்தப் பக்கத்திலிருந்தும், இந்தப் பக்கத்திலிருந்தும் மக்களும் வாகனங்களூம் செல்லாமல் இருப்பதிற்கு போலீசார் தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினார்கள்.
காரணம் சரியான வடிக்கால் வாய்க்கால் இல்லாததால் மழைநீர் சப்வே நிரம்பி, சாலையிலும் ஆறாக ஓடியது.
மேற்கு சி.ஐ.சி நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து வெளியேறியது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றனர் அப்பகுதி மக்கள்.
தி.நகர் தீவு நகராக காட்சியளித்தது. சவுத் வெஸ்ட் போக் ரோடு, வி.என். ரோடு, ஜீவா பூங்கா பகுதி, ஜீ.என் செட்டி ரோடு ஆகிய சாலைகள் முழுவதும் நதிகளாக மாறியிருந்தன.
ஜி என் செட்டி ரோடு மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம் உட்பட சென்னையில் உள்ள பல மேம்பாலங்களை கார் பார்க்கிங்காக மாற்றியிருந்தனர் பொது மக்கள்.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடப்பதற்கு முன்பே சென்னையின் நிலைமை இப்படி இருப்பதால், தமிழக அரசு முன்னச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் ஆங்காங்கே படகுகளை நிறுத்தி வைத்துள்ளது.