Connect with us

இந்தியா

புயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்: செந்தில்பாலாஜி

Published

on

Loading

புயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்: செந்தில்பாலாஜி

ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) இரவு மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் நேரம் திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் சென்னை வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் கன மழை, புயல் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் 24X7 செயல்பட்டு வரும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் மற்றும் ஃபெஞ்சல் (FENGAL) புயலை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (நவம்பர் 30) ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார், மின் பகிர்மான இயக்குனர் அ.ரா.மாஸ்கர்னஸ் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த ஆய்வுக்குப் பின் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள செய்தியில், “மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல் கடுமையான மழை பெய்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

புயல் கரையினை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழையுடன் பலத்த காற்று 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அவ்வாறான பலத்த காற்று வீசும் நேரங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்னூட்டிகளை கை நிறுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயற்பொறியாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 10,000 பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

Advertisement

மின் தடங்கல் ஏதேனும் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு இடம் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ. மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன