இந்தியா
பூண்டு, மாவு மூட்டைகளுடன் சிசிடிவி கேமராக்களையும் அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்…. போலீசார் விசாரணை

பூண்டு, மாவு மூட்டைகளுடன் சிசிடிவி கேமராக்களையும் அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்…. போலீசார் விசாரணை
கொள்ளை சம்பவம் நடந்த பகுதி
25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பூண்டு மற்றும் மாவு மூட்டைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், குடோனில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் காட்சிகளை ரெக்கார்ட் செய்யும் பெட்டி உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள ஆர்ம்ஸ் என்ற காவல் நிலைய எல்லை பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு மிகப் பெரிய அளவில் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இஞ்சி, பூண்டு மற்றும் ஏராளமான மளிகை சாமான்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.
சில கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அங்கே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடோனுக்கு வந்த கொள்ளையர்கள் மிகவும் சாதுரியமாக பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். பைக், கார் மற்றும் லாரிகளில் வந்த சுமார் 20 கொள்ளையர்கள் குடோனில் இருந்த காவலர்களை துப்பாக்கி முனையில் பிடித்து அருகில் கட்டி வைத்துள்ளார்கள்.
அதன் பின்னர் குடோனுக்குள் லாரிகளை கொண்டு சென்று ஒரு மணி நேரத்திற்குள்ளாக 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை லாரிகளில் ஏற்றியுள்ளனர். இவற்றில் 150 மூட்டை பூண்டு, மாவு பாக்கெட்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.
கொள்ளையடித்த பின்னர் குடோனில் இருந்த சிசிடிவி கேமராக்களையும், அதனை ரெக்கார்டு செய்யும் டிவிஆர் அமைப்பு ஆகியவற்றையும் கொள்ளையர்கள் லாரியில் அள்ளிப்போட்டு சென்றுள்ளார்கள். இதன் பின்னர் குடோன் வாட்ச்மேன்கள் ஒரு வழியாக தாங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து நடந்த சம்பவங்களை உரிமையாளரிடம் கூறியுள்ளார்கள்.
அவர் அளித்த தகவலின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் விசாரணை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.