இந்தியா
மலையையும், மழையையும் ரசித்தபடி நீலகிரிக்கு “பை பை” சொன்னார் குடியரசுத் தலைவர்

மலையையும், மழையையும் ரசித்தபடி நீலகிரிக்கு “பை பை” சொன்னார் குடியரசுத் தலைவர்
கோத்தகிரியில் சாலையில் சென்ற காட்சி
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27ம் தேதி கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். கோவையிலிருந்து ஊட்டிக்கு சாலை மார்க்கமாக வருகை புரிந்தார். குடியரசு தலைவர் வருகையை ஒட்டி நான்கு மாவட்ட காவல்துறையினர் சுமார் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் 27ம் தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு வந்த குடியரசுத் தலைவர் 28ம் தேதி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். 29ஆம் தேதி ராஜ்பவனின் பழங்குடியினர் மக்களை சந்தித்தார். குடியரசுத் தலைவர் வருகையால் பத்து நாட்களுக்கு டிரோன் கேமராக்களை பறக்க விட தடை செய்யப்பட்டது. மேலும் தங்கும் விடுதிகள் வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்தது இன்றைய தினம் காலை ஊட்டியில் இருந்து கிளம்பிய குடியரசுத் தலைவர் கோத்தகிரி சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் சென்று அடைந்தார்.
இன்றைய தினம் கடும் மேகமூட்டத்தின் காரணமாக சாலைகள் அனைத்தும் மேகம் சூழ்ந்து வெண் போர்வை போர்த்தியதைப் போல காட்சி அளித்தது.கோத்தகிரி நகர பகுதிகளில் குடியரசுத் தலைவர் கோவை செல்வதை முன்னிட்டு உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் காத்திருந்தனர். 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இன்றைய தினம் குடியரசுத் தலைவர் டெல்லி திரும்பியதால் நீலகிரி மாவட்டம் கடும் பாதுகாப்பிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.