இந்தியா
முதல்வராக பதவி ஏற்ற ஹேமந்த் சோரன்! பங்கேற்ற இந்திய கூட்டணி தலைவர்கள்!

முதல்வராக பதவி ஏற்ற ஹேமந்த் சோரன்! பங்கேற்ற இந்திய கூட்டணி தலைவர்கள்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்து தேர்தல் முடிவுகள் கடந்த 23ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி 56 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. அதேபோல், பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 24 தொகுதிகளை வென்றன.
இந்தத் தேர்தலில் முக்தி மோர்ச்சா 43 தொகுதியில் நேரடியாக போட்டியிட்டது. இதில், 34 தொகுதிகளில் அந்தக் கட்சி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வரலாற்றில் இதுவே அந்தக் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது எனும் வரலாற்றையும் படைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அந்த மாநில ஆளுநர் சந்தோஷ் காங்வார் ஹேமந்த் சோரனுக்கு பதவியேற்பை நடத்திவைத்தார்.
இந்தப் பதவி ஏற்பு விழாவில், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.