உலகம்
முப்பது ஆண்டுகளில் நீரிழிவு நோய் மும்மடங்காக அதிகரிப்பு!

முப்பது ஆண்டுகளில் நீரிழிவு நோய் மும்மடங்காக அதிகரிப்பு!
உலகில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டில் மும்மடங்கு கூடியிருப்பதாக மருத்துவ சஞ்சிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
1990ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 மில்லியனுக்குக் குறைவாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 800 மில்லியனைத் தாண்டியுள்ளது.
டைப் 1, டைப் 2 என இரண்டு வகையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக அது உள்ளது.
முதலாம் வகை சிறு வயது முதலே ஒருவரைப் பாதிக்கலாம். இன்சுலின் பற்றாக்குறையால் அந்த வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதற்குச் சிகிச்சையளிப்பது சிரமம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரண்டாம் வகை நீரிழிவு நோய் நடுத்தர வயதினர் அல்லது மூத்தோரைப் பாதிக்கிறது.
குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாக ஆய்வு கூறுகிறது.
அவர்களில் பெரும்பாலோர் சிகிச்சை பெறுவதில்லை. அதனால் வாழ்நாள் முழுதும் அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறினர். உறுப்புகளைத் துண்டித்தல், இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு, மரணம் போன்றவை அவற்றுள் அடங்கும்.