இந்தியா
Chennai Airport : அதிகாலை வரை விமானங்கள் ரத்து!

Chennai Airport : அதிகாலை வரை விமானங்கள் ரத்து!
மோசமான வானிலை காரணமாக அதிகாலை வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் மழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவிருந்த விமானங்களும், புறப்படவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இன்று மட்டும் சுமார் 55 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை விமான நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் அறிவித்தது.
இந்த நிலையில் அதிகாலை 4:00 மணி வரை விமான நிலைய செயல்பாடுகள் நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ட்விட்டர் பக்கத்தில், “வானிலை நிலைமை மேம்படும் போது, விரைவில் செயல்பாடுகள் தொடங்குவதை உறுதி செய்வதற்காக, விமான நிலைய மூத்த அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகளுடனும் மற்றும் விமான நிறுவனங்களின் மேலாளர்களுடனும் காணொளி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் புயல் சுமார் 8:30 மணி அளவில் கரையை கடக்கும் என்றும் மோசமான வானிலை 11:30 வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய விமான நிலைய ஆணைய தலைமையுடன் கலந்தாலோசித்து, சென்னை விமான நிலையத்தில் செயல்பாடுகளை காலை 4:00 மணி வரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஷாக்: ஏடிஎம் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
அம்மா உணவகங்களில் இலவச உணவு: ரிப்பன் மாளிகையில் உதயநிதி ஆய்வு!