இந்தியா
Chennai Rains: “பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – கனமழை குறித்து துணை முதல்வர் உதயநிதி விளக்கம்!

Chennai Rains: “பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – கனமழை குறித்து துணை முதல்வர் உதயநிதி விளக்கம்!
சென்னை மழை பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள் தொடர்பாக ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர் சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது சென்னையில் எந்த அளவுக்கு மழை பொழிந்துள்ளது, நிவாரண பணிகள் என்னவென்பது தொடர்பாக அதிகாரிகளிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். மழை தொடர்பாக வரப்பட்ட புகார்கள், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார்.
இந்த ஆய்வுக்கு பின் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் 12 இடங்களில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. மீதமுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. மழை நீரை அகற்ற 1700 மோட்டார் பம்புகள் இயக்கப்படுகின்றன.
இன்று மதியம் ஒரு மணி முதல் மழையின் காரணமாக விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நடந்துவருகிறது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் அம்மா உணவகத்தில் இன்று இலவச உணவு வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள், படகுகள் தயார் நிலையில் உள்ளன.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு பாதிப்புகள் ஏற்படவில்லை. புயல் இன்னும் கரையை கடக்கவில்லை. எனினும் எந்தவித சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் அச்சமும், பதட்டமும் கொள்ள தேவையில்லை. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். கடந்த காலங்களில் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டு வந்திருக்கின்றோம். இப்போதும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். மீண்டு வருவோம்.
அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என்றால் மழை நீர் அதுவாகவே வடிந்துவிடும். ஆனால், காலையில் இருந்து மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக மழை பெய்தது. அதனால் மழை நீர் தேங்கியுள்ளது. மழை சிறிது நேரம் பெய்வது நின்றால் மழை நீர் வடிந்துவிடும். அனைத்து பகுதிகளிலும் மோட்டார் வைத்து மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.