இந்தியா
Fengal Cyclone | ஃபெஞ்சல் புயலின் தற்போதைய நிலை என்ன?

Fengal Cyclone | ஃபெஞ்சல் புயலின் தற்போதைய நிலை என்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெஞ்சல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகில் சனிக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைப்பொழிவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வும் மையம் குறிப்பிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தற்போது சென்னையில் இருந்து 190 கி.மீ தூரத்திலும் புதுச்சேரியில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் உள்ளது. ஃபெஞ்சல் புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதால் கரையை கடக்க தாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read :
ஃபெஞ்சல் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்? – வானிலை மையம் கணிப்பு!
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (30ம் தேதி) அதி கன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.