இந்தியா
Fengal Cyclone: கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி? – 10 மாவட்டங்கள் உஷார்!

Fengal Cyclone: கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி? – 10 மாவட்டங்கள் உஷார்!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் பல மணிநேரம் கடலிலேயே பயணித்தது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் புயலின் வேகம் படிப்படியாக குறைந்ததால், புயல் கரையை கடப்பது தாமதமானது. இதன் தாக்கம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இன்று காலை முதலே அதிகமான மழைப்பொழிவு இருந்தது.
இந்த நிலையில் தான் ஃபெஞ்சல் புயலின் வெளிவட்ட பகுதி காரைக்கால் – மகாபலிபுரம் இடையே மாலை 5.30 மணிபோல் கரையை கடக்கத் தொடங்கியது என்றும், இதன்மூலம் புயல் கரையை கடக்கத் தொடங்கும் நிகழ்வு தொடங்கியது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஃபெஞ்சல் புயல் தற்போது கடற்கரையில் இருந்து 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது புயலின் கண் பகுதி என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்துக்குள் புயலின் கண் பகுதி கரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புயலின் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ தொலைவில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக புயல் முழுமையாக கரையை கடக்க 6 மணிநேரம் வரை எடுத்துக்கொள்ளும் என்றும் இந்திய வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று நள்ளிரவு வரை புயல் கரையை கடக்கும் நிகழ்வு நடக்கும் என்றும் நாளை அதிகாலை தான் புயல் முழுமையாக கரையை கடந்து ஆழ்ந்த காற்றுழத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், மழை பொழிவும் இருக்கும், அதேநேரம் கரையை கடந்த பிறகு வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் உள்பகுதிகளில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மாலையில் இருந்தே சென்னையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து பலத்த காற்று மட்டுமே வீசி வருகிறது. அதேபோல் இன்று இரவும் பெரிய அளவில் சென்னையில் மழை பெய்யாது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழைப்பொழிவுக்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கனமழைக்கான எச்சரிக்கை நீங்கியது. மேலும் சென்னை ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அதேநேரம் புயல் கரையை கடக்கும் பகுதிகளான புதுச்சேரி, கல்பாக்கம், கடலூர் மற்றும் மரக்காணம் ஆகிய பகுதிகளில் கனமழை பொழிவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, புயல் கரையை கடந்த பின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழை பொழியும் என்றும் கூறப்பட்டுள்ளது.