இந்தியா
Fengal Cyclone: புயல் முழுமையாக கரையை கடக்க எவ்வளவு நேரம் ஆகும்? – வானிலை மையம் தகவல் இதோ!

Fengal Cyclone: புயல் முழுமையாக கரையை கடக்க எவ்வளவு நேரம் ஆகும்? – வானிலை மையம் தகவல் இதோ!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது என்பது தொடர்பாக தென்மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. மேலும் தற்போது ஃபெஞ்சல் புயல் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் புயல் கரையை கடக்கக்கூடும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பாலசந்திரன், “புயல் கரைக்கு அருகே வரும்போது அதன் நகர்வு வேகம் சற்று குறைய வாய்ப்பு உண்டு. புயலை மிகத் துல்லியமாக சொல்ல முடியாது. திடீரென காற்று வீசும். திடீரென மழை பெய்யும். புயலின் அமைப்பே அப்படித்தான்.
புயல் கரையை கடக்க சில மணிநேரங்கள் கூட ஆகலாம். முழுமையாக கரையை கடக்க சில பல மணிநேரங்கள் ஆகலாம். ஒவ்வொரு புயலுக்கும் ஒரு அமைப்பு உள்ளது. அது கடல் பகுதியில் ஒரு மாதிரியும், தரைப்பகுதியில் ஒரு மாதிரியும் இருக்கும். சில சமயங்களில் வேகமாக கரையை கடக்கும். சில நேரங்களில் மெதுவாக கரையை கடக்கலாம். எனவே, எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும் என்பதை கூற முடியாது.
ஃபெஞ்சல் புயலைப் பொறுத்தவரை, சில சமயங்களில் 12 கி.மீ, சில சமயங்களில் 7 கி.மீ வேகம், சில சமயங்களில் 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது. பல்வேறு காரணிகளுடன் தொடர்பிருப்பதால், புயலின் வேகத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. புயலைச் சுற்றியுள்ள மேககூட்டங்களைப் பொருத்துதான் மழை பொழிவு இருக்கும்.
மேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்தால், தொடர்ந்து மழைப்பொழிவும், கொஞ்சம் விலகியிருந்தால் விட்டுவிட்டு மழைப்பொழிவும் இருக்கும். புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு.
அது ஒரு சிறிய புள்ளி போன்றது அல்ல. அதனால்தான் காரைக்காலில் இருந்து மாமல்லபுரம் வரை என்றும் புதுவைக்கு அருகே என்றும் கரையை கடக்கும் கூறுகிறோம். புயல் அமைப்பில் மையப்பகுதிக்கூட ஒரு சிறிய புள்ளியாக இருக்காது. புயலின் கண்பகுதி கூட ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்” என்று விளக்கம் அளித்தார்.