விளையாட்டு
IPL Auction 2025 : ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள்…

IPL Auction 2025 : ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள்…
ரிஷப் பந்த் – ஷ்ரேயாஸ் ஐயர்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் கடந்த 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு அணியில் எடுக்கப்பட்ட வீரர்கள் பின்வருமாறு-
இடது கை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமானரிஷப் பந்த்தை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு வாங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகமான தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் ரிஷப் பந்த்.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை அணியில் எடுக்க கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26.75 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடிக்கு வாங்கியுள்ளது. அவருக்கு இது அதிகமான தொகை என விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி அணியில் எடுத்துக் கொண்டது. இவர் ரூ. 18 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ. 18 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் அதிக தொகைக்கு வாங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை ரூ. 15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியுள்ளது. இவர் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணியால் கே.எல்.ராகுல் ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அதே அணியில் ரூ. 2 கோடிக்கு இணைந்த ஃபாஃப் டூப்ளசிஸ் இருப்பதால் இருவரில் யாருக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 12.5 கோடிக்கு வாங்கியுள்ளது. அணியில் பும்ரா, தீபக் சாஹர் உள்ளிட்டோர் இருப்பதால் மும்பை அணி வலுவாக காணப்படுகிறது.
பெங்களூரு அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ. 12.50 கோடிக்கு வாங்கியுள்ளது. யார்க்கர் மற்றும் லெங்த் பவுலிங்கில் ஹேசில்வுட் கலக்குவதால் இவரது வருகை எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 12.5 கோடிக்கு வாங்கியுள்ளது.