Connect with us

உலகம்

ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வெற்றி

Published

on

Loading

ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வெற்றி

 

ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வேட்பாளரான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரெய்சியின் திடீர் மறைவை அடுத்து அந்நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில், இதய அறுவை சிகிச்சை நிபுணரும், சீர்திருத்தங்களை ஆதரிப்பவருமான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. “பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதன் மூலம், ஈரானின் அடுத்த அதிபராக மசூத் பெசெஷ்கியன் தேர்வானார்” என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஈரான் அதிபர் தேர்தலில் வாக்களிக்க 6.10 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் சுமார் 3 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். பெறப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டதில், மசூத் பெசெஷ்கியன் 1 கோடியே 63 லட்சம் வாக்குகளை (53.70%) பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களில் முக்கியமானவரான சயீத் ஜலிலி ஒரு கோடியே 30 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். இதையடுத்து, நாட்டின் அடுத்த அதிபராக மசூத் பெசெஷ்கியன் தேர்வாகி இருக்கிறார்.

தேர்தல் வெற்றியை அடுத்து அரசு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய மசூத் பெசெஷ்கியன், நாட்டின் மீதான அன்பு மற்றும் உதவும் எண்ணத்துடன் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் நட்பின் கரத்தை நாங்கள் நீட்டுவோம். நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள். அனைவரையும் நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் பயன்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

மசூத் பெசெஷ்கியனின் வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களின் தெருக்களில் மசூத் பெசெஷ்கியனின் ஆதரவாளர்கள் நடனமாடியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருவதை செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களில் மசூத் பெசெஷ்கியன் மட்டுமே மிதவாதி என்று கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளோடு ஈரான் கடும் மோதல் போக்கைக் கொண்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளோடு நட்புறவை ஏற்படுத்த முயல விரும்புவதாக தேர்தலுக்கு முன் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்திருந்தார். [எ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன