இந்தியா
“ஏக்கருக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

“ஏக்கருக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி
ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.
இதனையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் கன மழை பொழியும் என கடந்த மூன்று தினங்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படியே நேற்றும், இன்றும் கன மழை பொழிந்துள்ளது. அதிலும், விழுப்புரம் மற்றும் கடலூரில் அதி கன மழை பொழிந்துள்ளது. மயிலம் பகுதியில் மட்டும் சுமார் 51 செ.மீ. மழை பொழிந்துள்ளது.
இந்த இரு மாவட்டங்களிலும் விளை நிலங்கள் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. ஸ்டாலின் அரசு உரிய அதிகாரிகளை கொண்டு பாதிப்பை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அதில், கன மழையின் காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. அதனையும் கணக்கிட்டு, ஒரு ஏக்கருக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
சென்னையில் வெறும் 7 செ.மீ மழை தான் பொழிந்திருக்கிறது. இது இயல்பான மழை. எனவே ஐந்து, ஆறு மணி நேரத்தில் அந்த தண்ணீர் தானாக வடிந்துவிடும். ஆனால், ஊடகத்திலும் பத்திரிகைகளிலும், இந்த ஸ்டாலினும் அவரது சகாக்களும் விரைவாக செயல்பட்டதால் தான் சென்னை சாலைகளில் நீர் வடிந்ததாக பில்டப் செய்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு மதிப்பளிப்பதில்லை என ஸ்டாலின் சொல்கிறார். பிரதான எதிர்க்கட்சி மக்கள் பிரச்சனையை உரிய நேரத்திற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். முதலமைச்சர் அதற்கு உரிய தீர்வை காண்பது அவரின் கடமை” என்று பேசினார்.