இந்தியா
குளிர்கால தும்மல், காய்ச்சல், உடல் வலி… மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியமா?

குளிர்கால தும்மல், காய்ச்சல், உடல் வலி… மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியமா?
ஊரெங்கும் ஒரே தும்மலும், காய்ச்சலுமாக இருக்கிறது. சிலர், ‘உடலெல்லாம் வலிக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ‘காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது’ என டெங்கு பரிசோதனை செய்துகொள்கிறார்கள். எதற்கெல்லாம் மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்? பொது மருத்துவர்களின் பதில் என்ன?
”கடந்த சில மாதங்களாகவே பருவகால மாற்றத்தால் வருகிற காய்ச்சலுடன் வைரல் மூச்சுப்பாதைத் தொற்று, சிக்கன் குனியா மற்றும் ஆங்காங்கே டெங்கு என மூன்று வகையான காய்ச்சல் தமிழகமெங்கும் இருக்கிறது.
இந்தப் பிரச்னையில் இருமல், தும்மல், கை கால் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தும்மல் அதிகமாக வருகிறது என்பதால், அதன் மூலமாகவே மற்றவர்களுக்கும் பரவி வருகிறது. அதனால், மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். மற்றவர்கள், கொஞ்ச நாளைக்கு மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களைத் தவிருங்கள். மற்றபடி, பயப்பட தேவையில்லை.
இன்னொரு தகவல். சிலருக்கு வைரஸ் தொற்றால் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இவர்கள், ஓ.ஆர்.எஸ் கரைசல் குடித்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சோர்வாக உணரும்பட்சத்தில், உடனே மருத்துவரை பார்த்துவிடுவது நல்லது.
சிக்கன் குனியா என்றால் முதலில் காய்ச்சல் வரும். கூடவே லேசாக உடல் வலியும் இருக்கும். இந்தப் பிரச்னையில் சளி, இருமல், தும்மல் பெரியளவில் இருக்காது. காய்ச்சல்கூட பொதுவாக ஒன்றிரண்டு நாட்கள்தான் இருக்கும். சிலருக்கு ஒருநாள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மட்டும் 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் சரியான பிறகுதான், உடலின் ஜாயின்ட்களில் வலி வர ஆரம்பிக்கும். இந்த வலி பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாளில் சரியாகி விடும். சிலருக்கு மட்டும் 2 அல்லது 3 மாதம் அல்லது அதற்கு மேலும்கூட வலி இருக்கும். காய்ச்சல் வந்தவுடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டாலே போதும். இந்தக் காய்ச்சலுக்கும் பயப்பட தேவையில்லை.
டெங்கு வந்தால், காய்ச்சல் அடிக்கும். கூடவே கண்களுக்குள்ளும் வயிற்றின் மேல் பகுதியிலும் வலி இருக்கும். டெங்கு காய்ச்சல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்து, நடுவில் ஒருநாள் இருக்காது. பிறகு மறுபடியும் காய்ச்சல் வரும். இந்தக் காய்ச்சலும் பெரும்பான்மையானவர்களுக்கு பெரியளவில் தொல்லைக் கொடுக்காது. மருத்துவரைப் பார்த்து மாத்திரை எடுத்துக்கொண்டாலே சரியாகி விடும்.
பருவ கால மாற்றத்தால் வருகிற காய்ச்சலுக்கு, மருந்து, மாத்திரை, ஓய்வு போதும். சிக்கன் குனியா, டெங்கு ஆகிய இரண்டுமே கொசுக்களால் வருவதால், வீட்டைச் சுற்றி சிரட்டைகளில், பிளாஸ்டிக், கல்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்கள் இரவில் கடிக்கும். சிக்கன் குனியா, டெங்கு ஏற்படுத்தும் கொசுக்களோ பகலில் கடிக்கும். அதனால், பகல் நேரங்களில் உடல் முழுவதும் மறையும்படி உடை உடுத்திக்கொள்ளுங்கள். மற்றபடி, எந்தக் காய்ச்சலுக்கும் நீங்கள் பயப்பட தேவையில்லை” என்று நம்பிக்கை அளிக்கிறார்கள்.
டாப் 10 நியூஸ்: கரையைக் கடந்த ‘ஃபெஞ்சல் புயல்’ முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை!
காவி நாட் ஃபிட் ஃபார் மி… கொதித்தெழுந்த சீமான்