இந்தியா
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நில அபகரிப்பு! அதிமுக பிரமுகர் கைது!

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நில அபகரிப்பு! அதிமுக பிரமுகர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது மகன் சிபு ஆண்டனி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிபு ஆண்டனிக்கு சொந்தமாக நெல்லை மாவட்டம் கைலாசபேரி பகுதியில் 60 சென்ட் நிலம் உள்ளது.
இதனை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் சிபு ஆண்டனி ஈடுபட்டுள்ளார். இந்த நிலத்தை வாங்குவதற்காக கூத்தங்குழியைச் சேர்ந்த டான் பாஸ்கோ என்பவர் சிபு ஆண்டனியிடம் பேசியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைக்காக அதிமுக பிரமுகரான சுப்பிரமணி மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கர் சரோ ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார் டான் பாஸ்கோ. நிலத்திற்கான விலை குறித்து பேசியதில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டான் பாஸ்கோ தனது கூட்டாளிகளான சுப்பிரமணி மற்றும் சரோ ஆகியோருடன் சேர்ந்து சிபு ஆண்டனியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளார்.
டான் பாஸ்கோவுக்கு சொந்தமாக ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே ஹாலோ பிளாக் தயாரிக்கும் கம்பெனி ஒன்று உள்ளது. அங்கு சிபு ஆண்டனியை கடத்திச் சென்று அவர்கள் அவரை அடித்து உதைத்து, மிரட்டி 30 சென்ட் நிலத்தை எழுதி வாங்கியுள்ளனர்.
மேலும் 1 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து சிபு ஆண்டனியை விரட்டி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிபு ஆண்டனி இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிமுக பிரமுகரான சுப்பிரமணி மற்றும் டான் பாஸ்கோ ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான அவரது கூட்டாளி சரோவை போலீசார் தேடி வருகின்றனர்.