இலங்கை
1,287 கிலோ பீடி இலைகள் மீட்பு

1,287 கிலோ பீடி இலைகள் மீட்பு
தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,287 கிலோ பீடி இலைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழக கடற்பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் வழியாக, இலங்கைக்கு தொடர்ச்சியாக பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று (04) மாலை தலைமன்னார் அருகே கீரி கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்த 40 மூட்டைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
அந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில், நனைந்த நிலையில் 1,287 கிலோ பீடி இலைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இந்த பீடி மூட்டைகளை தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்திச் சென்றபோது ரோந்துக் கப்பல்களிடமிருந்து கடத்தல்காரர்கள் தப்பிப்பதற்காக கடலிலேயே விட்டு விட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், கடத்தல்காரர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.