இந்தியா
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… விழுப்புரத்தில் ஸ்டாலின் ஆய்வு!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… விழுப்புரத்தில் ஸ்டாலின் ஆய்வு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி இரவு ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து புயலானது வலுவிழந்து, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது. இதனால் அம்மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டு வீடுகளின் மீது விழுந்ததில் 7 பேர் சிக்கினர். இவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள பொது மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து மரக்காணம் மந்தவை புதுக்குப்பத்தில் உள்ள நிவாரண முகாமிற்கு சென்ற ஸ்டாலின், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றப்பின், நிவாரண பொருட்களை அவர்களுக்கு வழங்கினார்.
பின்னர் விக்கிரவாண்டிக்கு ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். இதற்கிடையில், மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமியும், தருமபுரி மாவட்டதிற்கு அமைச்சர் ராஜேந்திரனையும் முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.