இலங்கை
உழவு இயந்திர விபத்த- காணாமல் போன சாரதியின் உதவியாளர் பொலிஸ் நிலையம் வருகை

உழவு இயந்திர விபத்த- காணாமல் போன சாரதியின் உதவியாளர் பொலிஸ் நிலையம் வருகை
அம்பாறை, கரைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட உழவு இயந்திரத்தின் உதவியாளர் காரைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (28) காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்த அவர், வெள்ளச் சூழ்நிலையின் போது பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலை மீறி உழவு இயந்திரத்தில் பணத்திற்காக ஆட்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக காரைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, உழவு இயந்திரம் கவிழ்ந்து காணாமல் போன 4 பாடசாலை மாணவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இரண்டு மாணவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலையின் போது வவுனியாவில் ஏரி ஒன்றில் நீர் வெளியேற்றத்தை பார்வையிடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், திருகோணமலை யான் ஓயா ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நபரும் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மக்கள் ஆபத்தான சூழ்நிலையை கருத்திற் கொள்ளாததன் காரணமாகவே அனர்த்தத்தினால் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனக ஹந்துன்பதிராஜா தெரிவித்தார்.