இந்தியா
தென் பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்… தத்தளிக்கும் கடலூரின் சோக காட்சி

தென் பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்… தத்தளிக்கும் கடலூரின் சோக காட்சி
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று இரவு 1.7 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் அது 2.4 லட்சமாக அதிகரித்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் காரணமாக 23 பகுதிகளில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமப் பகுதிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 25 ஊராட்சி ஒன்றியங்களும் நான்கு மாநகராட்சி வார்டுகளும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அழகிய நத்தம், கலையூர், நல்லாத்தூர், பெரிய கங்கணம் குப்பம், சின்ன கங்கன்குப்பம், உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளும் 25-க்கும் மேற்பட்ட ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராமங்களும் கடலூர் மாநகராட்சியின் மஞ்சக்குப்பம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வெளி செம்மண்டலம், ஆல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உடைப்பு காரணமாக கடும் பாதிப்பை சந்தித்தது.
பல்வேறு இடங்களில் இருந்து டிராக்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள் 30 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தாழங்குடா மற்றும் கண்ட காடு கிராமம் முழுமையாக தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. அங்கிருந்து மக்களை டிராக்டர் மூலம் மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.
ஃபெஞ்சலின் கோர முகம்; நூலிழையில் உயிர் தப்பித்த நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர்கள் குழு!
கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 30 முகாம்களில் 22,207 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து மக்கள் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த வெள்ளம் காரணமாக கடலூர் – புதுச்சேரி – சென்னை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அளவுக்கு அதிகமான தண்ணீர் பெரிய கங்கணாங்குப்பம் என்ற இடத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் செல்வதால் ஆல்பேட்டை மற்றும் சின்ன கங்கனாங்குப்பம் பகுதியில் போலீசார் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இந்த வாகனங்கள் நாகப்பட்டினம், விழுப்புரம் நான்கு வழிச் சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றது. மேலும் மாலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளும் மழை நீர் வேகமாகச் சென்று வருகிறது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதுமே தண்ணீர் தேங்கி உள்ளது. கூடுதலாக தண்ணீர் அதிக அளவில் திறந்து விடுவதால் தொடர்ச்சியாக இதுவரை கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாத சாவடி, உண்ணாமலை, செட்டி சாவடி, குண்டு சாலை ஆகிய பகுதிகள் வெள்ள பாதிப்பில் சிக்கித் தவித்து வருகிறது.