இந்தியா
விழுப்புரத்தில் வெள்ளம் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலை துண்டிப்பு!

விழுப்புரத்தில் வெள்ளம் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலை துண்டிப்பு!
விழுப்புரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைவழி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொட்டி தீர்த்த மழையால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
சங்கராபாணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
சித்தனி அருகே சுமார் 2 கிமீ தொலைவுக்கு வெள்ள நீர் சூழந்ததால் ஒரு வழி பாதையில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சுமார் 5 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்துகள், கார்கள், கன ரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சில வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
விக்ரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பாலம் எண் 452ல் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை வந்தே பாரத், வைகை, பல்லவன், சோழன் ஆகிய விரைவு ரயில்கள் இரு வழித்தடத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.